சிவகங்கை மாவட்டத்தில் 483 மாணாக்கர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்
சிவகங்கை மாவட்டத்தில் 483 மாணாக்கர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை அமைச்சர் பெரிய கருப்பன் வழங்கினார்.
கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் , திருப்பத்தூர் பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட3 பள்ளிகளில் மொத்தம் 483 மாணாக்கர்களுக்கு ரூ.23.09 இலட்சம் மதிப்பீட்டிலான விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.
கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் , சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட நாகப்பா மருதப்பா அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மற்றும் திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கோட்டையிருப்பு அரசு மேல்நிலைப்பள்ளி, திருக்கோஷ்டியூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில், விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தின் கீழ், மாணாக்கர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாடு முதலமைச்சர், தலைமையிலான தமிழக அரசு அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பெற்று,பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியான மாநிலமாக திகழ்ந்து வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர், ஆட்சிப் பொறுப்பேற்று கடந்த இரண்டு ஆண்டுகளில் பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில் புதிதாகவும் பல்வேறு சிறப்பு திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள்.
ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது கல்வியை பொறுத்தே அமைகிறது. எனவே அதனை கருத்தில் கொண்டும், குறிப்பாக எதிர்கால இந்தியாவை வழிநடத்தக் கூடிய சக்தியாக விளங்கிவரும் மாணாக்கர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டும், பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயிர்கல்வித் துறையில் ,எண்ணற்ற திட்டங்களை மாணாக்கர்களுக்கு பயனுள்ள வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கி வருகிறார்கள்.
அதில், இந்த நிதியாண்டில் மட்டும் பள்ளிக்கல்விக்கென ரூபாய் 40 ஆயிரம் கோடியும், உயர்கல்விக்கென ரூபாய் 7 ஆயிரம் கோடியும் என, மொத்தம் 47 ஆயிரம் கோடி ரூபாய் கல்விக்கென ஒதுக்கீடு செய்துள்ளார்கள்.
அரசின் பல்வேறு நிதி நெருக்கடியினை சீர் செய்து, பொருளாதார வல்லுனர்களின் துணை கொண்டு மக்களுக்கான திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி முன்மாதிரியான முதலமைச்சராகவும் முதன்மையான முதலமைச்சராகவும் தமிழ்நாடு முதலமைச்சர் திகழ்ந்து வருகிறார்.
மேலும்,முந்தைய ஆட்சியாளர்களால் அறிவிக்கப்பட்ட விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டத்தின் கீழ் ஆதிதிராவிட மாணவியர்களுக்கு மட்டும் மிதிவண்டிகள் வழங்கப்பட்டு வந்த சூழ்நிலையில், அனைத்து மாணாக்கர்களுக்கும் பாகுபாடின்றி விலையில்லா மிதிவண்டிகளை வழங்கிடும் நோக்கில், கருணாநிதியால், விரிவுபடுத்தப்பட்ட திட்டமே, விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டமாகும்.
இத்திட்டத்தின் கீழ் கடந்த கல்வியாண்டில் (2022-2023) பதினொன்றாம் படித்த அரசு பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டத்தினை கடந்த ஜூலை மாதம் தமிழ்நாடு முதலமைச்சர், சென்னையில் மாணாக்கர்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தார்.
அதனை தொடர்ந்து சிவகங்கை மாவட்டத்தில் மாணாக்கர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கிடும் பொருட்டு, கடந்த மாதம் சிவகங்கை அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவியர்களுக்கு வழங்கி தொடங்கி வைக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, இன்றைய தினம் திருப்பத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட நாகப்பா மருதப்பா அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 352 மாணவியர்களுக்கு தலா ரூபாய் 4760 வீதம் மொத்தம் ரூபாய் 1675520 மதிப்பீட்டிலும், திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கோட்டையிருப்பு அரசு மேல்நிலைப் பள்ளியில் 26 மாணவியர்களுக்கு தலா ரூபாய் 4760 வீதம் மொத்தம் ரூபாய் 123760 மதிப்பீட்டிலும், 11 மாணவர்களுக்கு தலா ரூபாய் 4900 வீதம் மொத்தம் ரூபாய் 53900மதிப்பீட்டிலும் , மற்றும் திருக்கோஷ்டியூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 36 மாணவர்களுக்கு ரூபாய் 4760 வீதம் மொத்தம் ரூபாய் 171360 மதிப்பீட்டிலும், 58 மாணவர்களுக்கு தலா ரூபாய் 4900 வீதம் மொத்தம் ரூபாய் 284200மதிப்பீட்டிலும் என, 3 பள்ளிகளைச் சார்ந்த மொத்தம் 483 மாணாகர்களுக்கு ரூபாய் 2308740 மதிப்பீட்டிலான விலையில்லா மிதிவண்டிகள் இன்றைய தினம் வழங்கப்பட்டுள்ளது.
தங்களின் பெற்றோர்களின் நிலையிலிருந்து, உங்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு முதலமைச்சரால், வழங்கப்பட்டு வரும் அனைத்து நலத்திட்டங்களையும் பெற்று பயனடைந்து வரும் மாணவ, மாணவியர்கள் கல்வியில் மட்டுமன்றி விளையாட்டு மற்றும் தனித்திறன்களில் சிறந்து விளங்கி தங்களது பெற்றோர்களுக்கும் தாங்கள் பயின்ற பள்ளிக்கும், தங்களுக்கு கற்பித்த ஆசிரியர்களுக்கும் பெருமை சேர்த்திட வேண்டும்.
இவ்வாறு கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், மேற்கண்ட பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பொது தேர்வில் முதல் இரண்டு இடங்களை பெற்ற மாணவ மாணவியர்களுக்கும், விளையாட்டு போட்டி மற்றும் தனித்திறன்களில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவியர்களுக்கும் என மொத்தம் ,16 மாணாக்கர்களுக்கு தலா ரூ.5000வீதம் பரிசுத்தொகையினை, கூட்டுறவுத்துறை அமைச்சர், தனது சொந்த நிதியிலிருந்து வழங்கி மாணாக்கர்களை ஊக்குவித்தார். மேலும், மேற்கண்ட பள்ளிகளில் பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கென தலா ரூ.10000வீதம் ,பள்ளிகளின் புரவலர் திட்ட நிதிக்கென வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் சிவராமன் , திருப்பத்தூர் பேரூராட்சித்தலைவர் கோகிலாராணி, திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் சண்முகவடிவேல், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் பாலுமுத்து, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ரவி, திருப்பத்தூர் பேரூராட்சி வார்டு உறுப்பினர் இராஜேஸ்வரிசேகர், ஒன்றிய குழு உறுப்பினர் க.ராமேஸ்வரி, ஊராட்சி மன்றத்தலைவர்கள் சுப்ரமணியன் (திருக்கோஷ்டியூர்), எம்.சுசிலா (கோட்டையிருப்பு), பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள்,பெற்றோர் ஆசிரிய கழக தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.