சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், விவசாயிகளுக்கான குறை தீர்க்கும் கூட்டம் ஆட்சியர் ப.மதுசூதன் ரெட்டி தலைமையில் நடைபெற்றது.;

Update: 2022-06-29 08:38 GMT

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், விவசாயிகளுக்கான குறை தீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், கண்மாய் மற்றும் ஊரணிகளில் உள்ள சீமைக்ருவேல் மரங்களை அகற்றி கண்மாய்களை முழுக்கொள்ளளவுடன் பராமரிப்பது குறித்தும், விளைபொருட்களை கொண்டு செல்வதற்கான சாலை வசதிகளை மேம்படுத்துவது குறித்தும், நீர்நிலை வரத்துக்வாய்க்கால்களை பராமரிப்பது குறித்தும், தேங்காய், நெல் கொள்முதல் நிலையங்கள் அமைப்பது குறித்தும், கிராமங்களுக்கு பேருந்து வசதிகள் குறித்தும், வேளாண் பயிர்களுக்கு நிலுவையிலுள்ள இழப்பீட்டுத் தொகை வழங்கிட வேண்டியும் போன்ற பல்வேறு மனுக்களைப் பெற்று, மனுக்களுக்கு உரிய தீர்வு காண துறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

மாவட்ட ஆட்சித்தலைவர், தெரிவிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சர், வேளாண் தொழிலை உழவர்கள் எவ்வித இடையூறு இன்றியும் தேவையான அனைத்து வசதிகளுடன் மேற்கொள்ளும் பொருட்டு ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். சிவகங்கை மாவட்டத்திலுள்ள நீர் நிலையிலுள்ள ஆக்கிரமிப்புக்களை உடனடியாக அகற்றி பயன்பாட்டிற்கு கொண்டு வரவும், விவசாய நிலங்களை விலங்குகள் சேதப்படுத்தாமல் பாதுகாத்திடவும், தேவையான நிலங்களில் தடுப்பணைகள் ஏற்படுத்தி நிலத்தடி நீர் மட்டத்தினை பாதுகாத்திடவும், தமிழக அரசின் சார்பில் விவசாயிகள் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு வழங்கப்படும் நிதியுதவிகளை விரைந்து வழங்கிடவும், விவசாயிகள் அரசின் திட்டங்களை பயன்களை பெற்றிட தேவையான சான்றிதழ்களை வழங்கிட துறை சார்ந்த அலுவலர்கள் இணைந்து பணியாற்றிடவும், நில அளவைத்துறையினர் விவசாயிகள் கோரும் அளவீட்டுப்பணியினை விரைந்து மேற்கொள்ளவும், விவசாயிகளுக்கான மின் விநியோகங்களை சீரான முறையில் வழங்கிடவும், கண்மாய்களில் உள்ள மடைகள், தடுப்புச்சுவர்கள் பழுதடைந்து இருப்பின் விரைந்து சீர்செய்திடவும்,

மேலும், புதிய தடுப்பணைகள் கட்டித்தரவும், வங்கிகளின் மூலம் கடனுதவிகள் வழங்கி வேளாண் சார்ந்த புதிய தொழில் தொடங்கிட நடவடிக்கை மேற்கொள்ளவும், கடனுக்குரிய மானியத்தொகையினை தகுதிவாய்ந்த பயனாளிகளுக்கு வழங்கிடவும், சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என, மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தெரிவித்தார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ப.மணிவண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் இரா.சிவராமன், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் சி.வெங்கடேஸ்வரன், கூட்டுறவுத்துறை இணைப்பதிவாளர்கள் கோ.ஜீனு, ப.ரவிச்சந்திரன், கால்நடைப் பராமரிப்புத்துறை இணை இயக்குநர் கா.நாகநாதன், சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் கு.சுகிதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சர்மிளா மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News