சிவகங்கை மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் விநியோகம்

குடும்ப அட்டைதாரர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நாட்களில் நியாய விலைக்கடைக்கு சென்று பொங்கல் பரிசு தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம்

Update: 2023-01-04 08:01 GMT

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி.

அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் மற்றும்  இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்; குடும்ப அட்டைத்தாரர்கள் ஆகியோர் பொங்கல் பரிசுத்தொகுப்பினை, பெறுவதற்கு ஏதுவாக, அந்தந்த நியாய விலைக்கடைகளில் பகுதிவாரியாக டோக்கன்கள் வழங்கப்படவுள்ளது -

மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தகவல் தெரிவித்துள்ளார்.

பொங்கல் - 2023 தமிழர் திருநாள் சிறப்பாகக் கொண்டாடும் விதமாக அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்; குடும்ப அட்டைத்தாரர்களுக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்த ஒரு  முழுக்கரும்பு, 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ரொக்கப்பணம் ரூ.1,000 பொது விநியோகத் திட்டத்தின் கீழ் செயல்படும் நியாய விலைக்கடைகளின் மூலமாக பொங்கல் பரிசுத்தொகுப்பு தமிழக அரசால் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் பரிசுத்தொகுப்பு பெற தற்போது முதல் 08.01.2023-ஆம் தேதி வரை டோக்கன்கள் வழங்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது மேலும், கூட்டநெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு, அந்தந்த நியாய விலைக்கடைகளில்; பகுதிவாரியாக டோக்கன்கள் வழங்கப்படும். அதற்கான விவரப்பட்டியல் சம்பந்தப்பட்ட நியாய விலைக்கடைகளில் அறிவிப்பாக தெரிவிக்கப்படும்.

வருகின்ற 09.01.2023-ஆம் தேதியன்று பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்குவது முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்படவுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் திட்டத்தினை தொடங்கி வைத்த அன்றைய தினமே அனைத்து நியாய விலைக்கடைகளிலும் டோக்கன்களில் குறிப்பிட்டுள்ள நாள் மற்றும் நேரத்தின்படி, பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படும்.

குடும்ப அட்டைதாரர்கள் பொங்கல் பரிசான பச்சரிசி மற்றும் சர்க்கரை பெற கட்டாயம் துணிப்பை கொண்டு வர வேண்டும். குடும்ப அட்டைதாரர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நாட்களில் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடித்து பொங்கல் பரிசுத்தொகுப்பினை பெறவேண்டும்.

மேலும், பொங்கல் பரிசுத்தொகுப்பு மற்றும் ரொக்கத் தொகை விநியோகம் குறித்த புகார்களுக்கு கட்டணமில்லா தொலைபேசி எண்:1077-ஐ தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

Similar News