சிவகங்கை மாவட்டத்தில் பெரியார் சமத்துவபுர கட்டுமான பணி: ஆட்சியர் ஆய்வு
பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பயனாளிகள் இட ஒதுக்கீடு அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு வீடுகள் ஒதுக்கப்படவுள்ளன;
கண்ணமங்கலப்பட்டி ஊராட்சிகுட்பட்ட கோட்டை வேங்கைப்பட்டி கிராமத்தில், பெரியார் நினைவு சமத்துவபுர கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு செய்தார்.
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கண்ணமங்கலப்பட்டி ஊராட்சி, கோட்டை வேங்கைப்பட்டி கிராமத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் கட்டப்பட்டுள்ள பெரியார் நினைவு சமத்துவபுர கட்டுமானப் பணிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் கூறியதாவது: கோட்டை வேங்கைப்பட்டி ஊராட்சியில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில், பெரியார் நினைவு சமத்துவபுரம் சாலை வசதி, மின்சார வசதி, குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, விளையாட்டுத்திடல் போன்ற அடிப்படை வசதிகளுடன் புதிதாக 100 வீடுகள் கட்டப்பட்டுள்ளன.
பெரியார் நினைவு சமத்துவபுரத்திற்கு, பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பயனாளிகள் இட ஒதுக்கீடு அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு வீடுகள் ஒதுக்கப்படவுள்ளன. இங்கு முதியவர்கள் மற்றும் இளைஞர்கள் உடற்பயிற்சி செய்வதற்கு திறந்த வெளி உடற்பயிற்சிக்கூடம், குழந்தைகளுக்கான அங்கன்வாடி மையங்கள், பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் வழங்குவதற்காக பொது விநியோகக்கடை, விளையாட்டுத்திடல், வீடுதோறும் வீட்டுக் காய்கறிகள் தோட்டம் அமைத்தல், மரக்கன்றுகள் வளர்த்தல் போன்ற அடிப்படை வசதிகள் ஏற்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிகளை, விரைந்து முடித்திட சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார் மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி.
இந்த ஆய்வின்போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆ.ரா.சிவராமன், ஊரக வளர்ச்சி செயற்பொறி யாளர் ச.சிவரஞ்சனி, சிங்கம்புணரி வட்டாட்சியர் எஸ்.கயல்செல்வி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.