சிவகங்கை அருகே மாணவியர் விடுதியில் ஆட்சியர் ஆய்வு

மாணவிகள் எதிர்கால இலட்சியங்கள், தங்களது படிப்பின் நோக்கங்கள் ஆகியன குறித்து முழுமையாக அறிந்து செயல்பட வேண்டும்.

Update: 2023-04-27 08:00 GMT

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன்ரெட்டி (பைல் படம்)

சிவகங்கை  மாவட்டம், காஞ்சிரங்கால் பகுதியில், செயல்பட்டு வரும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளி மற்றும் கல்லூரி மாணவியர்கள் விடுதியில்  மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு மேற்கொண்டார்.

சிவகங்கை மாவட்டம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் காஞ்சிரங்கால் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு பள்ளி மற்றும் கல்லூரி மாணவியர்கள் விடுதியில், மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின் போது, அரசு பள்ளி மற்றும் கல்லூரி மாணவியர்கள் விடுதியில் வழங்கப்படும் உணவின் தரம், அளவு, மேம்படுத்த வேண்டிய குடிநீர், கழிப்பிட வசதி மற்றும் விடுதியினை பராமரிக்கும் முறை, மாணவியர்களின் வருகைப்பதிவு,தங்கி பயிலும் மாணவியர்களின் எண்ணிக்கை, மாணவியர்களுக்கு தேவையான மேம்படுத்த வேண்டிய வசதிகள் ஆகியனக் குறித்து திடீர் ஆய்வு மேற்கொண்டு, மாணவியர்களிடம் அவர்களின் பெயர், ஊர், கல்வி பயிலும் ஆண்டு, சுய விவரம் போன்றவற்றை கேட்டறிந்து, அவர்களின் எதிர்கால திட்டம் குறித்து கலந்துரையாடினார்.

இந்த ஆய்வின் போது, மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவிக்கையில், மாணவிகள் தாங்கள் படிக்கும் காலத்திலேயே திட்டமிட்டு எதிர்கால இலட்சியங்கள், தங்களது படிப்பின் நோக்கங்கள் ஆகியன குறித்து முழுமையாக அறிந்து செயல்பட வேண்டும். தங்களது குடும்ப சூழ்நிலையை அறிந்து, பெற்றோர்களை மனதில் கொண்டு நல்லமுறையில் படிப்பதுடன், கூடுதலான தனித்திறமையையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். இவ்விடுதியில் விளையாட்டில் சிறந்து விளங்கும் மாணவியர்களும் உள்ளீர்கள். தங்களது விளையாட்டுத் திறனை மேம்படுத்துவதற்கு, மாவட்ட விளையாட்டு துறையினருடன் இணைந்து பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.

படிக்கும் காலத்தில் கிடைக்கும் நேரத்தினை வீணாக்காமல், தங்களது வாழ்க்கையை தேர்ந்தெடுப்பதற்கு அடித்தளமாக விளங்கும் மேல்நிலைப்படிப்பை நல்லமுறையில் பயில வேண்டும். உயர்கல்வியில் தாங்கள் விரும்பும் பாடப்பிரிவினை தேர்ந்தெடுத்து, தங்களுக்கு உபயோகம் உள்ள வகையில் புரிந்து பயில வேண்டும். தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையத்தின் சார்பில், அவ்வப்போது போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.

இதனை கருத்தில் கொண்டும், அதில் பங்கு பெற்று தங்களது அறிவுத்திறனை மேம்படுத்திக் கொள்ளலாம். குறிப்பாக, தினந்தோறும் குறிப்பிட்ட நேரம் செய்தித்தாள்கள் வாசிப்பதுடன் உலகில் நிகழும் முக்கிய நிகழ்வுகள் குறித்தும் அறிந்து கொள்வது அவசியமானதாகும்.

மாணவியர்கள் வாசிப்புத் திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். அதிகமான புத்தகங்களை வாசிப்பதை விட, தேவையான அவசியமான பாடங்களை படிக்கும் போது தேர்வினை எளிதில் எதிர்கொள்ளலாம். உங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் தமிழ்நாடு அரசு செய்து வருகிறது. இதனை நல்லமுறையில் பயன்படுத்திக் கொண்டு, பயின்று தங்களது வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்திக் கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் வி.பாஸ்கரன், தனி வட்டாட்சியர் உமா மகேஸ்வரி மற்றும் விடுதிக்காப்பாளர்கள், பணியாளர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News