சிவகங்கையில் செஸ் போட்டி விழிப்புணர்வு வாகனம்: அமைச்சர் தொடக்கம்
உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுவது தொடர்பான விழிப்புணர்வு வில்லைகள் ஒட்டப்பட்ட 15 பேருந்துகள் இயக்கி வைக்கப்பட்டன;
தமிழகத்தில் 44-வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்த விழிப்புணர்வு வாகனத்தை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் கொடியசைத்து தொடக்கி வைத்தார்.
சிவகங்கை மாவட்டம், மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் தமிழகத்தில் 44-வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடர்பான விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட வாகனத்தினை, மாவட்ட ஆட்சித்தலைவர் .ப.மதுசூதன் ரெட்டி, தலைமையில் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் ஆ.தமிழரசிரவிக்குமார் முன்னிலையில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் (19.07.2022) கொடியசைத்து துவக்கி வைத்தார்.
பின்னர், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் கூறியதாவது: தமிழகத்தில் முதன்முறையாக தமிழக அரசின் சார்பில் மாமல்லபுரத்தில் வருகின்ற 28.07.2022 முதல் 10.08.2022 வரை 44-வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறவுள்ளது. இப்போட்டியில், சர்வதேச அளவில் 186 நாடுகளைச் சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனர். அதிகளவில் செஸ் போட்டி வீரர்களைக் கொண்ட நாடாக இந்தியா திகழ்கிறது. குறிப்பாக, தற்போது தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்கும் விதமாக மாமல்லபுரத்தில் செஸ் போட்டிகள் நடைபெறவுள்ளது.
இப்போட்டிகள் தொடர்பாக பொதுமக்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு தமிழகம் முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, சிவகங்கை மாவட்டத்தில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திடும் பொருட்டு விழிப்புணர்வு பதாகைகள் விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்கள் சுவரொட்டிகள் உள்ளிட்டவை தொடர்பாகவும் குறிப்பாக பள்ளி மாணவ, மாணவிகளிடையே செஸ் போட்டிகள் நடத்தப்பட்டும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அதன் தொடர்ச்சியாக, இன்றையதினம் 44-வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுவது தொடர்பான விழிப்புணர்வு ஒட்டுவில்லைகள் ஒட்டப்பட்ட 15 பேருந்துகள் மாவட்ட முழுவதும் சென்று விழிப்புணர்வை ஏற்படுத்திடும் வகையில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு, விருப்பமுள்ள வீரர்கள் முறையாகப் பயிற்சி பெற்று இதுபோன்ற போட்டிகளில் பங்கேற்று, தங்களது திறனை வெளிக்கொணரலாம் என, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், நகர்மன்றத் தலைவர்கள் சி.எம்.துரைஆனந்த் (சிவகங்கை), மாரியப்பன் கென்னடி (மானாமதுரை) , ஆவின் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தலைவர் த.சேங்கைமாறன், ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர்கள் மஞ்சுளா பாலசந்தர் (சிவகங்கை), லதாஅண்ணாத்துரை (மானாமதுரை), மாவட்டக் கவுன்சிலர்கள் பாசெந்தில்குமார், சாந்தா சகாயராணி, காங்சிரங்கால் ஊராட்சி மன்றத்தலைவர் கே.எஸ்.எம்.மணிமுத்து, வட்டார போக்குவரத்து அலுவலர் அ.மூக்கன், மாவட்ட விளையாட்டு அலுவலர் ரமேஷ், வட்டார போக்குவரத்து ஆய்வாளர் ஆர்.மாணிக்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.