சிவகங்கையில் விளையாட்டு போட்டி: அமைச்சர் தொடக்கம்
மாநில அளவிலான பாரதியார் தின, குடியரசு தின விளையாட்டு போட்டியை கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்.;
சிவகங்கையில் தமிழ்நாடு பள்ளி கல்வித்துறையின் சார்பில் சாம்பவிகா மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தலைமையில் நடந்த மாநில அளவிலான பாரதியார் தின, குடியரசு தின குத்துச்சண்டை விளையாட்டு போட்டியை கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்.
பின்னர் கூட்டுறவுத்துறை அமைச்சர் கூறியதாவது:சிவகங்கை மாவட்டத்தில் சாம்பவிகா மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு முழுவதும் உள்ள 38 மாவட்டங்களில் வெற்றி பெற்ற சுமார் 1000 மாணவிகள் 1600 மாணவர்கள் என மொத்தம் 2600 மாணவ மாணவிகள் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் மாநில அளவிலான பாரதியார் தின, குடியரசு தின குத்துச்சண்டை விளையாட்டு போட்டியில் கலந்து கொள்கிறார்கள்.
இப்போட்டியில், முதல் இரண்டு நாட்கள் மாணவிகளும், அடுத்த இரண்டு நாட்கள் மாணவர்களும் பங்குபெறுகின்றனர். இப்போட்டியில், வெற்றி பெறும் மாணவ மாணவிகளுக்கு முதல் பரிசு தங்கமும், இரண்டாம் பரிசு வெள்ளியும், மூன்றாம் பரிசு வெண்கல பதக்கமும் வழங்கப்படவுள்ளது. மாணவ, மாணவிகள் இது போன்ற போட்டிகளில் கலந்துக் கொண்டு; தங்கள் திறமைகளை வளர்த்துக் கொண்டு முன்னேற்ற பாதைகளில் செல்ல வேண்டும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், ஆவின் பால்வளத்தலைவர் சேங்கைமாறன், சிவகங்கை நகர்மன்றத்தலைவர் சி.எம்.துரைஆனந்த், மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மாணவ, மாணவியர்கள், கலந்து கொண்டனர்.
அனைத்து மாவட்டங்களிலும் 14 முதல் 19 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு பாரதியார் தினம் மற்றும் குடியரசு தின விளையாட்டுப் போட்டிகள் நடத்த பள்ளிக் கல்வி உத்தரவிட்டுள்ளது. அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், முதன்மை உடற்கல்வி ஆய்வாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.