Sivagangai District Development Scheme Work சிவகங்கை மாவட்டத்தில், வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அமைச்சர் அடிக்கல் நாட்டல்
Sivagangai District Development Scheme Work கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன், சிவகங்கை நகராட்சி மற்றும் மானாமதுரை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மொத்தம் ரூ.4.99 கோடி மதிப்பீட்டிலான வளர்ச்சித் திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.;
Sivagangai District Development Scheme Work
கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன், சிவகங்கை நகராட்சி மற்றும் மானாமதுரை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு இன்றையதினம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் தலைமையில், அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்து பேசினார். அவர் பேசும்போது,
தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சி பொறுப்பேற்ற கடந்த இரண்டரை ஆண்டுகளில், தமிழகத்தை தலைசிறந்த மாநிலமாக உருவெடுக்கும் பொருட்டு, பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்தி வருகின்றார். அதனடிப்படையில், அரசின் அனைத்து துறைகளும் சிறந்து விளங்கி வருகிறது.
மேலும், கல்வி மற்றும் சுகாதாரத்தினை தனது இரு கண்களாகக் கொண்டு மாணாக்கர்களுக்கு பயனுள்ள வகையிலும் மற்றும் பொதுமக்களின் உடல் நலத்தினை பேணிக்காத்திடும் பொருட்டும் அதற்கான சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி, அனைத்து தரப்பு மக்களையும் பயன்பெற செய்து வருகின்றார். அதன்படி, இந்திய துணை கண்டத்தில் பிற மாநிலங்களில் உயர் கல்வி கற்பதில் தற்போது 24 சதவீதம் உள்ளது. அதனை ஒப்பிடுகையில் தமிழகத்தில் உயர்கல்வி கற்பதில் 54 சதவீதம் பெற்று கல்வியில் வளர்ச்சிப் பெற்ற மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது.
இதுபோன்று, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பிலும், மக்களை தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48 உள்ளிட்ட திட்டங்களி்ன் வாயிலாக பொதுமக்களின் உடல்நலத்தினை பேணிக்காத்து,
தலைசிறந்த மருத்துவர்களை கொண்டு உயிர் காக்கும் மருத்துவ சேவையினை பொதுமக்களுக்கு தரமான முறையில் வழங்கி, மருத்துவத்துறையில் முன்னோடி மாநிலமாகவும் தமிழகம் திகழ்கின்ற வகையில் திட்டங்களை செயல்படுத்தி வருன்றார்.
குறிப்பாக, பிற மாநிலத்தவர்களும் தரமான மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக தமிழகத்தை நாடி வருகின்ற சூழலும் ஏற்பட்டுஇ தற்போது மருத்துவ மையாக தமிழகம் திகழ்ந்து வருகிறது.
ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களின் வளர்ச்சியை பொறுத்தே அமைகிறது என்ற அடிப்படையில், பொதுமக்களுக்கு தேவையான பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவது மட்டுமன்றி, நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் வசித்து வரும் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளையும் நிவர்த்தி செய்திடும் பொருட்டும், அனைத்துப் பகுதிகளிலும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வதற்கென துறை ரீதியான உத்தரவுகளை பிறப்பித்து, அதற்கான நடவடிக்கைகளையும் சிறப்பாக மேற்கொண்டு வருகிறார்கள்.
அதன்படி,சிவகங்கை மாவட்டத்தில் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை மாவட்டத்தின் கடைக்கோடி பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வழங்கி வருவது மட்டுமின்றி, அனைத்து நகர்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகளிலும் அடிப்படை வசதிகளை மேம்பாடு அடையச் செய்வதற்கான பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அப்பணிகளை பல்வேறு திட்டங்கள் மற்றும் பல்வேறு நிதிகளின் கீழ் மேற்கொள்ளப்பட்டு, அதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது.
அதனடிப்படையில், சிவகங்கை நகராட்சிக்குட்பட்ட பகுதியில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான, புதிய தினசரி சந்தை அமைத்திடும் பொருட்டு, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் 2023-24-ன் கீழ் ரூ.349 இலட்சம் மதிப்பீட்டில் புதிய தினசரி சந்தை அமைக்கும் பணி மற்றும் மானாமதுரை நகராட்சிக்குட்பட்ட பகுதியில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் தேசிய நகர்புற சுகாதார இயக்கம் 2023-24 ன் கீழ் ரூ.120 இலட்சம் மதிப்பீட்டிலான புதிய நகர்புற அரம்ப சுகாதார மையம் , ரூ.30 இலட்சம் மதிப்பீட்டிலான புதிய நகர்புற ஆரம்ப துணை சுகாதார மையம் ஆகியவைகள் அமைக்கும் பணிகள் என, மேற்கண்ட இரண்டு நகராட்சி பகுதிகளிலும் மொத்தம் ரூ.4.99 கோடி மதிப்பீட்டிலான வளர்ச்சி திட்ட பணிகளுக்கு இன்றையதினம் அடிக்கல் நாட்டப்பட்டு, அதற்கான கட்டுமானப்பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட பகுதிகளில், நடைபெற்று வரும் பணிகளை தரமான முறையில், ஒப்பந்த காலத்திற்குள் விரைந்து முடிக்கப்பெற்று, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வழங்கிட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளை நிவர்த்தி செய்வது ஒவ்வொரு மக்கள் பிரதிநிதிகளின் கடமையாகும். ஆகவே, தங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளிடம் தங்களது பகுதிகளின் அடிப்படை கூடுதல் தேவைகள் குறித்து , எடுத்துரைத்துஇ அதனை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டும். அதில் தகுதியான கோரிக்கைகள் மீது உடன் நடவடிக்கைகள் மேற்கொண்டு, அதற்கான பணிகள் உடனடியாக மேற்கொள்ளப்படும் என, கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் கு.சுகிதா, நகர்மன்றத்தலைவர்கள்சி.எம்.துரைஆனந்த் (சிவகங்கை), மாரியப்பன் கென்னடி (மானாமதுரை), மானாமதுரை, நகர்மன்ற துணைத்தலைவர் பாலசுந்தரம், திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன், மானாமதுரை ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் லதா அண்ணாதுரை, ஒன்றியக்குழு துணைத் தலைவர் முத்துசாமி, சிவகங்கை 21-வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் அயூப்கான், மானாமதுரை 17-வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் பாலாஜி, மானாமதுரை வட்டாட்சியர் ராஜா, மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் , துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.