சிவகங்கை: வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள அறையில் ஆட்சியர் ஆய்வு
இந்த அறைகளை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை அரசியல் கட்சிகள் பிரதிநிதிகள் முன்னிலையில் ஆய்வு செய்யப்படுகிறது.;
வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையை சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி தலைமையில், அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிப் பிரமுகர்கள் முன்னிலையில் திறக்கப்பட்டு, காலாண்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
தலைமை தேர்தல் அலுவலர் மற்றும் அரசு முதன்மை செயலாளர் பொது (தேர்தல்) அறிவுரையின்படி, தேர்தலின் போது பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீலிடப்பட்டு அதற்கான கிடங்கில் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது. இங்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. இந்த அறைகளை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை அரசியல் கட்சிகள் பிரதிநிதிகள் முன்னிலையில் ஆய்வு செய்யப்படுகிறது.
அதன்படி வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையினை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை திறந்து, ஆய்வு மேற்கொண்டு, காலாண்டு அறிக்கை சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதன் அடிப்படையில், இம்மாத காலாண்டு ஆய்வு அறிக்கையை சமர்பிப்பதற்கு ஏதுவாக, இன்றையதினம் (29.03.2023) சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பறையினை, மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தலைமையில், அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக்கட்சிப் பிரமுகர்கள் முன்னிலையில், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் திறக்கப்பட்டு, ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்நிகழ்வின் போது, தேர்தல் வட்டாட்சியர் மாணிக்கவாசகம் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக்கட்சிப் பிரமுகர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.