சிவகங்கை; அரசு மாதிரி பள்ளியில், கலெக்டர் ஆய்வு

சிவகங்கை, கீழக்கண்டனி பண்ணை பொறியியல் கல்லூரி வளாகத்தில், தற்காலிக இடமான அரசு மாதிரிப் பள்ளியின் செயல்பாடுகள் குறித்து கலெக்டர் மதுசூதன் ரெட்டி, ஆய்வு மேற்கொண்டு, மாணாக்கர்களிடம் கற்றல் முறை குறித்து கலந்துரையாடினார்.;

Update: 2022-12-04 12:27 GMT

அரசு மாதிரி பள்ளியில், கலெக்டர் மதுசூதன் ரெட்டி ஆய்வு நடத்தினார்.

சிவகங்கை மாவட்டம், கீழக்கண்டனியில் தற்காலிக இடமான பண்ணை பொறியியல் கல்லூரி வளாகத்தில் தொடங்கப்பட்டுள்ள அரசு மாதிரிப்பள்ளியின் செயல்பாடுகள் குறித்து, கலெக்டர் மதுசூதன் ரெட்டி, ஆய்வு மேற்கொண்டு, மாணவர்களிடம் கற்றல் முறை குறித்து கலந்துரையாடினார்.

இந்நிகழ்வின் போது, கலெக்டர் மதுசூதன் ரெட்டி பேசியதாவது;

தமிழக முதல்வர், அரசுப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர் நலனைக் கருத்தில் கொண்டு எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக திகழ்ந்து வருகிறது. அந்த வகையில், அரசு பள்ளியில் பயிலும் மாணாக்கர்களை அகில இந்திய நுழைவுத்தேர்வு போன்ற உயர்கல்விக்கு தயார் செய்யும் விதமாக, செப்டம்பர் 5-ம் தேதி ஆசிரியர் தினத்தன்று தமிழகம் முழுவதும் 15 மாவட்டங்களில் அரசு மாதிரிப் பள்ளியினை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதில், சிவகங்கை மாவட்டமும் ஒன்றாகும். அதன்படி, கடந்த 12.10.2022 அன்று கீழக்கண்டனி பண்ணை பொறியியல் கல்லூரி வளாகத்தில், அரசு மாதிரிப்பள்ளி வகுப்புகள் தொடங்கி வைக்கப்பட்டு, தற்போது வரை இதில் 77 மாணவ, மாணவியர் சிறப்பாக பயின்று வருகின்றனர்.

இந்த உண்டு உறைவிட அரசு மாதிரிப்பள்ளியில் மாணவர்களுக்கான அனைத்து அடிப்படை வசதிகளும் உள்ளது. தரமான உணவுகளும் மற்றும் விடுதி வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கூடுதலாக, கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அரசுப்பள்ளியில் பயிலும் மாணவர்களை அகில இந்திய நுழைவுத்தேர்வு போன்ற உயர்கல்விக்கு தயார் செய்யும் விதமாகவும், மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு, அவர்கள் எவ்வித போட்டித் தேர்வுகளையும், நுழைவுத் தேர்வுகளையும் எளிதில் எதிர்கொள்வதற்கென தமிழக அரசால் இந்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனை மாணவர்கள் கருத்தில் கொண்டு, தங்களது நேரத்தை பயனுள்ள வகையில், பட்டியலிட்டு செலவிட வேண்டும். திறன்மிக்க ஆசிரியர்களைக் கொண்டு, பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதில், அனைத்துப் பாடப்பிரிவுகளிலும் வீடியோ மூலம் செயல்முறை விளக்கத்துடன் கற்பிப்பதற்கான நடவடிக்கைகளும் மேற் கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக, போட்டித் தேர்வுகளுக்கான மாதிரி வினாத்தாள்களைக் கொண்டு தினமும் தேர்வு நடத்துவதற்கும், அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் எதிர்காலத்தில் தாங்கள் என்ன ஆக வேண்டும் என்ற இலக்கினை நிர்ணயித்துக் கொண்டு, தங்களது இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும். பொருளாதாரம், சட்டம், பட்டயக் கணக்காளர், அறிவியல் வல்லுநர்கள் உட்பட பல்வேறு படிப்புக்கள் நமது அன்றாட வாழ்க்கையில் தொடர்புடையதாகவும், பயனுள்ள வகையிலும் உள்ளது. இதனையும் மாணவர்கள் கருத்தில் கொண்டு, அதற்கான நுழைவுத்தேர்வுகள் போன்றவற்றுக்கும் அடிப்படையாக இதனை மனதிற் கொண்டு புரிதலுடன் பயில வேண்டும்.

தங்களது உயர்கல்வியினை பயிலுவதற்கான சிறப்பான பல்கலைக்கழகம் மற்றும் பல்கலைக்கழகம் சார்ந்த கல்லூரியினை தேர்ந்தெடுத்து பயிலுவது அவசியமான ஒன்றாகும். இந்தாண்டு முதன்முதலாக தொடங்கப்பட்டுள்ள இந்த உண்டு உறைவிட அரசு மாதிரிப்பள்ளியில் பயின்று வரும் மாணவர்கள்  எதிர்காலத்தில் பயில உள்ள மாணவ, மாணவியருக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்து, அரசால் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டத்திற்கான வெற்றிக்கு அடித்தளமாக ஒவ்வொருவரும் திகழ்ந்திட வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் மதுசூதன் ரெட்டி பேசினார்.

மேலும், கீழக்கண்டனியில் தற்காலிக இடமான பண்ணை பொறியியல் கல்லூரி வளாகத்தில் தொடங்கப்பட்டுள்ள அரசு மாதிரிப்பள்ளியில் விடுதி, சமையல் அறை மற்றும் வகுப்பறை ஆகியவைகளில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டு, கூடுதலாக மேம்படுத்த வேண்டிய கட்டமைப்பு வசதிகள் குறித்து, துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சுவாமிநாதன், ஒருங்கிணைப்பாளர் காளிதாஸ் மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News