சிவகங்கை மாவட்டம் கீழடி அருகே விதை திருவிழா: ஆட்சியர் பங்கேற்பு
கிழடி கிராமத்தை சேர்ந்த வையை இயற்கை விவசாயிகளின் கூட்டமைப்பு 2-ஆவது ஆண்டாக விதை திருவிழாவை சிறப்பாக நடத்தி வருகிறது;
வையை இயற்கை விவசாயிகளின் 2-ம் ஆண்டு விதை திருவிழாவில் சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் பங்கேற்றார்
சிவகங்கை மாவட்டம், கீழடி ஊராட்சியில், வையை இயற்கை விவசாயிகளின் 2-ம் ஆண்டு விதை திருவிழா மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் பேசியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர், விவசாயிகளின் நலன் கருதி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி விவசாயிகளை பயன்பெறச்செய்து வருகிறார்கள். இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் விதமாக நமது சிவகங்கை மாவட்டத்தில் திருப்புவனம் வட்டம், கிழடி கிராமத்தை சேர்ந்த வையை இயற்கை விவசாயிகளின் கூட்டமைப்பு கடந்த ஆண்டு சிறப்பான பணியினை தொடங்கி, தற்பொழுது 2-ம் ஆண்டில் விதை திருவிழாவை சிறப்பாக நடத்தி வருகிறது.
கடந்த ஆண்டு வழங்கப்பட்ட விதைகளைக் கொண்டு, விவசாயிகள் இயற்கை முறையில் பாரம்பரிய முறைகளை பயன்படுத்தி விவசாயம் செய்து பயிரிட்டு அதில் விளைகின்ற அறுவடையில் இருந்து, ஒவ்வெரு விவசாயிகளும் ஒரு மூட்டையினை விவசாயிகளின் சங்க கூட்டமைப்பிற்கு வழங்கும் நிகழ்வும் இன்றைய தினம் இவ்விழாவில், நடைபெற்று கொண்டிருக்கிறது.
இயற்கை வேளாண்மையின் முக்கியத்துவத்தினை அனைவரும் தற்சமயம் உணர்ந்து வருகின்றோம். செயற்கையாக தயாரிக்கப்படும் உணவுகளால் ஏற்படும் பாதிப்புகளையும் நாம் அறிந்து வருகிறோம். அதனை சீர்செய்வதற்கும் இயற்கை விவசாயத்தை விவசாயிகள் ஊக்குவிப்பதற்கும் தமிழக அரசின் சார்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, விதைகளின் உற்பத்தியை பெருக்கிடவும், 7டன் விதைகளை வழங்கிட அரசு நிர்ணயித்துள்ளது. தமிழக அரசின் சார்பில் இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பதற்கு மாநில வேளாண் அபிவிருத்தி திட்டம் கீழ் பாரம்பரிய நெல் விதைகள் வழங்கப்படுகிறது. சிவகங்கை மாவட்டத்தில் அதிகளவில் பயிரப்படும் பயிர் நெல் ஆகும்.
நெல், சிறுதானியங்கள் ஆகியவைகளை இயற்கை முறையில் பயிரிடுவதற்காகவும், விவசாயிகளின் இயற்கை வேளாண்மையின் தரத்தை உறுதி செய்யும் விதமாகவும் இயற்கை வேளாண்மைக்கான தரச்சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது. இயற்கை விவசாயம் மேற்கொள்ளும் விவசாயிகள் அனைவரும் இச்சான்றிதழ்களை பெற வேண்டும். இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் இயற்கை விவசாயம் செய்து வரும் விவசாயிகளுக்கு அரசின் சார்பில் விருதுகள் வழங்கிடவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
விவசாயிகள் தங்களின் உற்பத்தி பொருட்களை உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் சந்தைபடுத்தும் முறைகள் குறித்து அறிந்து கொண்டு விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். தமிழக அரசால் விவசாயிகளுக்கான செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து அறிந்து கொண்டு பயன்பெறவேண்டும் என, மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், 15 விவசாயிகளுக்கு பராமபரிய நெல் விதைகள் மற்றும் 10 விவசாயிகள் உயிர் உரங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார்.
முன்னதாக, சிவகங்கை மாவட்டத்தில், நடைபெற்று வரும் 33-வது மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமின் மூலம் தடுப்பூசி போடும் பணியினை இன்றைய தினம் கீழடி ஊராட்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டார்.
இந்நிகழ்வுகளில், இணை இயக்குநர் (வேளாண்துறை) தனபாலன், துணை இயக்குநர் பன்னீர்செல்வம், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மரு.ராம்கணேஷ், உதவி இயக்குநர்கள் சுந்தரமகாலிங்கம், பரமேஸ்வரன், சேதுபாஸ்கர கல்வி நிறுவனங்களின் தலைவர் சேதுகுமணன், இந்திய தொல்லியல் ஆராய்ச்சி துறை (சென்னை) அமரர்நாத் ராமகிருஷ்ணா, கீழடி ஊராட்சி மன்றத்தலைவர் வெங்கடசுப்பிரமணியன், வையை இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு கருணாகரசேதுபதி மற்றும் விவசாயிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.