தனியார் நிறுவனத் தொழிலாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

தனியார் நிறுவன தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய அகவிலைப்படி கணக்கீடு செய்து 01.04.2022 -முதல் உயர்த்தப்பட்டுள்ளது.

Update: 2022-04-29 12:15 GMT

01.04.2022 முதல் தனியார் நிறுவன தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய அகவிலைப்படி கணக்கீடு செய்யப்பட்டு உயர்த்தப்பட்டுள்ளது.

குறைந்தபட்ச ஊதியச் சட்டம் 1948-ன்படி, பல்வேறு வகையான தொழில்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 01.04.2022 முதல் வழங்கப்பட வேண்டிய அகவிலைப்படி கணக்கீடு செய்யப்பட்டு சென்னை, தொழிலாளர் ஆணையர் அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது. மேற்படி உயர்த்தப்பட்ட அகவிலைப்படியை அரசு பல்வேறு தொழில்களுக்கு நிர்ணயித்துள்ள அடிப்படை ஊதியத்துடன் வழங்கப்பட வேண்டும். மேலும், உயர்த்தப்பட்ட அகவிலைப்படியானது ஏப்ரல் 2022 மாதம் முதல் வழங்கப்பட வேண்டும்.

கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் விற்பனையாளர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.5,507 மற்றும் உயர்த்தப்பட்ட அகவிலைப்படி ரூ.4,698ஆக மொத்தம் ரூ.10,205 வழங்கப்பட வேண்டும். ஹோட்டல் மற்றும் ரெஸ்டாரண்ட்-ல் பணிபுரியும் சப்ளையர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.6,127ஃ- மற்றும் உயர்த்தப்பட்ட அகவிலைப்படி ரூ.6,708 ஆக மொத்தம் ரூ.12,835 வழங்கப்பட வேண்டும்.செக்யூரிட்டி கார்டுகளுக்கு அடிப்படை ஊதியம் ரூ.7,996மற்றும் உயர்த்தப்பட்ட அகவிலைப்படி ரூ.6,554ஆக மொத்தம் ரூ.14,550 வழங்கப்பட வேண்டும்.

பொது மோட்டார் போக்குவரத்து தொழிலில் பணிபுரியும் ஓட்டுநர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.9,118 அகவிலைப்படி ரூ.7,678ஆக மொத்தம் ரூ.16,796ம், நடத்துனர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.8,907, அகவிலைப்படி ரூ.7,678ஆக மொத்தம் ரூ.16,58-ம் வழங்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று, செங்கல் சூலை, சினிமா தியேட்டர்களில் பணிபுரியும் தொழிலாளர்கள், வீட்டுப்பணியாளர்கள், மருத்துவமனையில் பணிபுரியும் தொழிலாளர்கள், அரிசி ஆலை போன்ற 72 வகையான தொழில்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. உயர்த்தப்பட்ட அகவிலைப்படியை அரசு நிர்ணயித்துள்ள அடிப்படை ஊதியத்துடன் சேர்த்து வழங்கப்பட வேண்டும். மேற்படி அகவிலைப்படிஉயர்வு  01.04.2022 முதல் நடைமுறைக்கு வருகிறது.

மேலே குறிப்பிட்ட தொழில்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள அகவிலைப்படியை அனைத்து நிறுவனங்களும் தொழிலாளர் களுக்கு அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ள அடிப்படை ஊதியத்துடன் சேர்த்து வழங்கவேண்டும் என்றும், வழங்கப்படாத நிறுவனங்கள் மீது 1948-ஆம் வருட குறைந்தபட்ச கூலிச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு மதுரை, தொழிலாளர் இணை ஆணையர் முன்பாக சம்பந்தப்பட்ட தொழிலாளர் உதவி ஆய்வாளர் மூலம் கேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு பணியாளர்களுக்கு தரவேண்டிய வித்தியாசத் தொகை தொழிலாளர்களுக்கு பெற்று வழங்கப்படும். மேலும் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீது 10 மடங்கு வரை அபராதம் விதிக்கப்படும்.

மேலும், தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் (தேசிய பண்டிகை மற்றும் சிறப்பு விடுமுறை தினங்கள்) சட்டம் 1958-ன்படி, தேசிய விடுமுறை தினமாகிய மே தினத்தன்று 01.05.2022 அன்று கடைகள் மற்றும் நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட வேண்டும். மேற்படி தினத்தில் விடுமுறை அளிக்கப்படாமல் ஊழியர்கள் வேலை செய்ய அனுமதிக்கப்பட வேண்டுமானால் அவர்களுக்கு வேலையளிப்பவரால் இரட்டிப்பு சம்பளம் அல்லது வேறொருநாளில் சம்பளத்துடன் கூடிய மாற்றுவிடுப்பு அளிக்கப்பட வேண்டும்.

மேற்படி தேசிய பண்டிகை மற்றும் சிறப்பு விடுமுறை தினத்தில் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த கடைகள் மற்றும் நிறுவனங்களுக்கு ஏயு என்ற படிவத்திலும், உணவு நிறுவனங்களுக்கு ஐஏ என்ற படிவத்திலும், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களுக்கு படிவத்திலும் தேசிய பண்டிகை மற்றும் சிறப்பு விடுமுறை தினத்தன்று 24 மணி நேரத்திற்கு முன்னர் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

அவ்வாறு தேசிய விடுமுறை தினமான (01.05.2022) மே தினத்தன்று மேற்படி சட்டவிதிகளை அனுசரிக்காமல் அவற்றிற்கு மேற்படி சட்ட விதிகளை அனுசரிக்காமல் அவற்றிற்கு முரணாக தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தினால் சம்பந்தப்பட்ட வணிக நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் (தேசிய, பண்டிகை மற்றும் சிறப்பு விடுமுறை தினங்கள்) சட்டம் 1958, தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் சட்டம் 1958 மற்றும் மோட்டார் போக்குவரத்துத் தொழிலாளர் சட்டம் 1961 ஆகிய சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என சிவகங்கை, தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்)  தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News