கண்டியூர் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம்

Update: 2022-07-15 16:15 GMT

சிவகங்கை மாவட்டம், கண்டியூர் கிராமத்தில் ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம், கண்டியூர் கிராமத்தில் ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம்  நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை வட்டம், கண்டியூர் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம், மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி தலைமையில், காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.மாங்குடி முன்னிலையில் நடைபெற்றது.

தமிழக அரசின் சார்பில் 18 வயது முதல் 59 வயது உள்ளவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணியினை, மாவட்ட ஆட்சித்தலைவர் துவக்கி வைத்தார். பின்னர், மாவட்ட ஆட்சித்தலைவர் கூறியதாவது:

தமிழ்நாடு முதலமைச்சர், பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து, அனைத்துத்தரப்பு மக்களையும் பயன்பெறச் செய்து வருகிறார்கள். பொதுமக்களின் கோரிக்கைகளையும், அரசின் நலத்திட்ட உதவிகளையும் பொதுமக்களுக்கு நேரடியாக வழங்கும் பொருட்டு, ஒவ்வொரு மாதமும் ஒரு வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தினை தேர்ந்தெடுத்து, அதிலுள்ள கடைக்கோடி கிராமத்திற்கு சென்று, பொதுமக்களின் கோரிக்கைகளைப் பெற்று, தகுதியுடைய பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்கென ஒவ்வொரு மாதமும் மக்கள் தொடர்பு முகாம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

அதனடிப்படையில், இன்றையதினம் தேவகோட்டை வட்டம், கண்டியூர் கிராமத்தில் வருவாய் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றுள்ளது. இக்கிராமப்புறத்தில் வசிக்கின்ற பொதுமக்களின் வீடுகளுக்கு, அலுவலர்கள் குழுவாகச் சென்று, பொதுமக்களின் கோரிக்கைகளைப் பெற்று தகுதியான நபர்களுக்கு அதன் பயன்களை கிடைக்கப்பெறச் செய்யும் வகையிலும், அனைத்து அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றும் வகையிலும் இம்முகாம் அமைகிறது.

மேலும், மக்களின் கோரிக்கையான புதிய நியாயவிலைக்கடை குறித்து பரிசீலித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் மற்றும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் ஆகியவைகளின் கீழ் விவசாய தரிசு நிலங்களை செழிப்படையச் செய்வதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவுள்ளது.மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம மேம்பாட்டிற்கென, அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஊராட்சிக்கும் ரூ.30 இலட்சம் நிதியினை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

கிராம உள்ளாட்சி அமைப்பில், கிராம வளர்ச்சிக்கான வரைபடம் தயாரித்து கிராம வளர்ச்சிக்கு தேவையான ஒவ்வொரு வளர்ச்சி பணிகளையும் தேர்ந்தெடுத்து கிராமப்புற வளர்ச்சியினை மேம்படுத்திட நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மகளிர் சுயஉதவிக் குழுக்களைச் சார்ந்த உறுப்பினர்களுக்கு சுழல்நிதிக்கடன், வங்கிக்கடன் உள்ளிட்ட கடனுதவிகள் அளித்து, அவர்களின் வாழ்க்கைத்தரத்தினை மேம்படுத்துவதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கண்டியூர் ஊராட்சி ஒன்றியத்தில் 14-வது மற்றும் 15-வது நிதிக்குழு மானியத் திட்டத்தின் கீழ் 2020 முதல் நடப்பாண்டு வரை சாலை வசதி, குடிநீர் வசதி, பள்ளி வளாக சுற்றுச்சுவர் அமைக்கும் பணி, பேவர் பிளாக் சாலை, பைப் லைன் பதித்தல், கழிப்பறை வசதி ஏற்படுத்துதல், தடுப்பணை அமைத்தல் உள்ளிட்ட 26 வளர்ச்சிப் பணிகள் ரூ.83.21 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் 2020-2021-ஆம் நிதியாண்டில் 40 பணிகள் ரூ.93.61 இலட்சம் மதிப்பீட்டிலும், 2021-2022-ஆம் நிதியாண்டில் 20 பணிகள் ரூ.57.55 இலட்சம் மதிப்பீட்டிலும், 2022-2023-ஆம் நிதியாண்டில் 7 பணிகள் ரூ.31.69 இலட்சம் மதிப்பீட்டிலும் என மொத்தம் 67 பணிகள் ரூ.1.83 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பொதுமக்கள் கொரோனா நோய்த் தொற்றிலிருந்து தங்களைப் பாதுகாத்திடவும், வரும். முன் காப்போம் நடவடிக்கையாக தமிழக அரசின் சார்பில் 18 வயது முதல் 59 வயது வரை உள்ளவர்களுக்கு இலவசமாக தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.நமது மாவட்டத்தில் பூஸ்டர் தடுப்பூசியாக 18,100 கோவிட்ஷீல்டும், 31,090 கோவேக்சின் தடுப்பூசியும் இருப்பில் உள்ளது. பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்வர வேண்டும்.

தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து, துறை சார்ந்த முதன்மை அலுவலர்கள் இம்மக்கள் தொடர்பு முகாமின் மூலம் விரிவாக எடுத்துரைத்துள்ளனர். இதனை பொதுமக்கள் கருத்தில் கொண்டு, அத்திட்டங்கள் மூலம் பயன்பெற்று, தங்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என, மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், வருவாய்த்துறையின் சார்பில் 26 பயனாளிகளுக்கு ரூ.1.68 இலட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வகையான மாதாந்திர உதவித்தொகை பெறுவதற்கான ஆணையும், வேளாண்மைத்துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு நுண்ஊட்டச்சத்து மற்றும் உயிர் உரம் ரூ.368 மதிப்பீட்டிலும், கண்ணங்குடி ஊராட்சி ஒன்றியத்தில் பேவர் பிளாக் சாலை,மெட்டல் சாலை ரூ.3.48 இலட்சம் மதிப்பீட்டிலும், தோட்டக்கலை பண்ணை அமைக்கும் திட்டத்தின் கீழ் தலா ரூ.1.31 இலட்சம் மதிப்பீட்டில் 3 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.3.93 இலட்சம் மதிப்பீட்டில் தோட்டக்கலை பண்ணை அமைப்பதற்கான ஆணை, 5 பயனாளிகளுக்கு காய்கறி மற்றும் பழக்கன்று விதைகள்.

 கண்ணங்குடி ஊராட்சி முதல் திருபாக்கோட்டை குடியிருப்பு வரை ரூ.32.10 இலட்சம் மதிப்பீட்டில் மெட்டல் சாலை அமைத்தல் பணிக்கான ஆணை, ரூ.6.29 இலட்சம் மதிப்பீட்டில் விளங்குடி ஆதிதிராவிடர் காலனியில் பேவர் பிளாக் சாலை அமைத்தல் பணிக்கான ஆணை, 9 பயனாளிகளுக்கு தலா ரூ.12,000மதிப்பீட்டில் ரூ.1.08 இலட்சம் மதிப்பீட்டிலான தனிநபர் இல்லக் கழிப்பறை கட்டுவதற்கான ஆணை, கால்நடைப் பராமரிப்புத்துறையின் சார்பில் 3 பயனாளிகளுக்கு தலா ரூ.26,432 மதிப்பீட்டில் ரூ.79,296 மதிப்பீட்டிலான புல் வெட்டும் கருவிகள், மாவட்ட நுகர்வோர் மற்றும் குடிமைப்பொருள் வழங்கும் துறையின் சார்பில் 10 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளும், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறையின் சார்பில் 5 பயனாளிகளுக்கு மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் மருந்துப் பெட்டகங்கள் என மொத்தம் 48 பயனாளிகளுக்கு ரூ.49.35 இலட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, வழங்கி, பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களைப் பெற்றார்.

முன்னதாக, வேளாண்மைத்துறை, பொது சுகாதாரத்துறை, தோட்டக்கலைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்துறை ஆகியத் துறைகள் மூலம் பொதுமக்கள் பார்த்து எளிதில் அறிந்து கொள்ளும் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் இரா.சிவராமன், ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் க.சரவணன் மெய்யப்பன், தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர் எஸ்..பிரபாகரன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ஆர்.சுந்தரராசன், இணை இயக்குநர்கள் ஆர்.தனபாலன் (பொ) (வேளாண்மைத்துறை), நா.நாகநாதன் (கால்நடைப் பராமரிப்புத்துறை), மாவட்ட வழங்கல் அலுவலர் சி.ரத்தினவேல், தனித்துணை ஆட்சியர் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) மு.காமாட்சி, உதவி இயக்குநர் (தோட்டக்கலைத்துறை) எ.ரேகா, ஊராட்சி மன்றத்தலைவர் கே.ஆர்.இந்திரா, தேவகோட்டை வட்டாட்சியர் ஜெ.அந்தோணிராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் க.முத்துக்குமார், கே.பழனியம்மாள் மற்றும் பொதுமக்கள், அரசு அலுவலர்கள், பயனாளிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News