மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலத்திட்ட உதவி வழங்கல்
மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 10 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன;
சிவகங்கையில் நடைபெற்ற குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 10 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.92,760 மதிப்பீட்டிலானஅரசின் நலத்திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அலுவலர் ப.மணிவண்ணன் வழங்கினார்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், இலவச வீட்டுமனைப் பட்டா, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித் தொகை, மாவட்ட ஊனமுற்றோர் மற்றும் மறுவாழ்வுத் துறை உதவித் தொகை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள், புதிய மின்னணு குடும்ப அட்டை போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பொதுமக்களிடமிருந்து 322 மனுக்கள் பெறப்பட்டது. அம்மனுக்களில், தகுதி யுடைய மனுக்கள் மீது தனி கவனம் செலுத்தி, விரைந்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் ப.மணிவண்ணன் அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 04 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.6,840 வீதம் ரூ.27,360மதிப்பீட்டிலான மோட்டார் பொருத்திய தையல் இயந்திரங்களையும், 05 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.11,500வீதம் ரூ57,500 மதிப்பீட்டிலான தக்க செயலியுடன் கூடிய திறன்பேசிகளையும், 01 மாற்றுத்திறனாளிக்கு ரூ7,௯௦௦ மதிப்பீட்டிலான மடக்கு சக்கர நாற்காலியினையும் என, ஆக மொத்தம் 10 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.92,760 மதிப்பீட்டிலான அரசின் நலத்திட்ட உதவிகளையும், அதன் பயன்களையும் மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் (பொ) பி.சாந்தி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் து.கதிர்வேலு உட்பட அனைத்துத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.