தமிழ் வளர்ச்சித் துறை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு

நடப்பாண்டில் கடந்த 10.04.2023 அன்று மாவட்ட அளவில் கல்லூரி மாணாக்கர்களிடையே பல்வேறு போட்டிகள் சிவகங்கையில் நடத்தப்பட்டன;

Update: 2023-04-21 11:00 GMT

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசளித்த சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதனரெட்டி

சிவகங்கை மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில், மாவட்ட அளவில் கல்லூரி மாணாக்கர்களுக்கான நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில், மாவட்ட அளவில் கல்லூரி மாணாக்கர்களுக்கான நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ்களை, மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி வழங்கினார்.

தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில், கல்லூரி மாணாக்கர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்திடும் வகையில், ஆண்டுதோறும் மாவட்ட அளவில் கவிதை , கட்டுரை ,பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டு, மாணாக்கர்களுக்கு பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கி ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, நடப்பாண்டில் கடந்த 10.04.2023 அன்று மாவட்ட அளவில் கல்லூரி மாணாக்கர்களிடையே பல்வேறு போட்டிகள் சிவகங்கையில் நடத்தப்பட்டன.

அப்போட்டிகளில், சுமார் 20 கல்லூரிகளிலிருந்து 70-க்கும் மேற்பட்ட மாணாக்கர்கள் பங்கு பெற்றனர்.அதில், கவிதைப் போட்டிக்கெனவும், கட்டுரைப் போட்டிக்கெனவும் மற்றும் பேச்சுப் போட்டிக்கெனவும் தனித்தனியாக பேராசிரியர்களை நடுவர்களாக நியமனம் செய்யப்பட்டு, போட்டிகள் நடைபெற்றன.

இப்போட்டிகளில் கவிதைப் போட்டியில் முதல் பரிசினை காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரியில் இளங்கலை பொருளியல் மூன்றாமாண்டு பயின்று வரும் மாணவி சொ.மணிமஞ்சளா, இரண்டாம் பரிசினை சிவகங்கை அரசு மகளிர் கலைக் கல்லூரியில் இளங்கலை வணிகவியல் மூன்றாமாண்டு பயின்று வரும் மாணவி ரெ.இலக்கியா, மூன்றாம் பரிசினை சிவகங்கை சோழபுரம் சாந்தா மகளிர் கல்வியியல் கல்லூரியில் கல்வியியல் (தமிழ்) இரண்டாமாண்டு பயின்று வரும் மாணவி தி. சத்தியாவும் பெற்றனர்.

அதேபோன்று, கட்டுரைப் போட்டியில் முதல் பரிசினை காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரியில் இளங்கலைத் தமிழ் மூன்றாமாண்டு பயின்று வரும் மாணவி வே.பவித்ரா , இரண்டாம் பரிசினை சோழபுரம் சாந்தா கல்வியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வரும் மாணவி தெ.சிவசங்கரி , மூன்றாம் பரிசினை திருப்பத்தூர் ஆறுமுகம்பிள்ளை சீதையம்மாள் கல்லூரியில் இளங்கலை ஆங்கில இலக்கியம் மூன்றாமாண்டு பயின்று வரும் மாணவி கு.திலகவதி பெற்றனர்.

அதேபோன்று, பேச்சுப் போட்டியில் முதல் பரிசினை காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரியில் இளங்கலைத் தமிழ் இலக்கியம் முதலாம் ஆண்டு பயின்று வரும் மாணவர் கி.லெனின்குமார், இரண்டாம் பரிசினை காரைக்குடி வித்யாகிரி கலை (ம) அறிவியல் கல்லூரியில் இளங்கலை கணினி பயன்பாட்டியல் 2-ஆம் ஆண்டு பயின்று வரும் மாணவர் ந.முகமது கைஃப் , மூன்றாம் பரிசினை , அரியக்குடி அன்னை தெரசா கல்வியியல் கல்லூரியில் இளங்கலை இயற்பியல் அறிவியல் 2-ஆம் ஆண்டு பயின்று வரும் மாணவி க.கீர்த்தனா பெற்றனர்.

மேற்கண்ட போட்டிகளில் வெற்றி பெற்ற கல்லூரி மாணவ, மாணவியருக்கு முதல் பரிசுத்தொகையாக தலா ரூ.10,000, இரண்டாம் பரிசுத்தொகையாக ரூ.7,000, மூன்றாம் பரிசுத்தொகையாக ரூ.5,000- மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை, மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, மாணாக்கர்களுக்கு வழங்கி வாழ்த்துகளை தெரிவித்து, ஊக்கப்படுத்தினார்.

இந்நிகழ்ச்சியில், சிவகங்கை மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் முனைவர் ப.நாகராசன், தமிழ் வளர்ச்சித்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News