அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தூய்மை பணியாளர் இல்லை: பெற்றோர் புகார்

2017 ஜூன் வரை ஊராட்சி ஒன்றியம் மூலம் கழிப்பறைகளை தூய்மைப்படுத்த ரூ.2,000 வழங்கப்பட்டது. பின்னர் நிதியை நிறுத்திவிட்டனர்

Update: 2021-12-22 06:45 GMT

திருப்புவனத்தில் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தூய்மை பணியாளர் இல்லை சுகாதாரமில்லையென பள்ளி நிர்வாகத்திடம் பெற்றோர் புகார் தெரிவித்தனர்.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் 2000திற்கும் மேற்பட்ட மாணவிகள் பயிலும் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தூய்மை பணியாளர் இல்லாததால் சுகாதாரமின்றி மாணவிகள் சிரமப்படுவதாக  பள்ளி நிர்வாகத்திடம் பெற்றோர் புகார் தெரிவித்தனர்.

திருப்புவனம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில்  6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை 2000 மாணவிகள், 50 கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உள்ளனர். மாவட்டத்திலேயே அதிக மாணவிகள் பயிலும் இப்பள்ளியில், மாணவிகளுக்கு 18 கழிப்பறைகள் உள்ளன. ஆனால், இக்கழிப்பறைகளை சுத்தம் செய்த தூய்மை பணியாளர்கள் இல்லை. இதனால் ஆசிரியர்களே சொந்த செலவில் தற்காலிக பணியாளரை நியமித்துள்ளனர். அவருக்கு பள்ளி வகுப்பறைகளில் உள்ள குப்பைகளை சுத்தம் செய்யவே நேரம் போதவில்லை. இதனால் அவரால் கழிப்பறைகளை முழுமையாக சுத்தம் செய்ய முடியவில்லை. கழிப்பறை சுகாதாரமின்மையால் மாணவிகள் பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாகி வருகின்றனர். 

இதுகுறித்து மாணவியின் தந்தை ராஜா கூறியதாவது: கழிப்பறைகளில் துர்நாற்றம் வீசுவதோடு, பல்வேறு உடல் உபாதைகளும் மாணவிகளுக்கு ஏற்படுகின்றன. 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் உள்ள இப்பள்ளியில் சுகாதார பணியாளரை பேரூராட்சி நிர்வாகம் நியமிக்க வேண்டும், என்றார். 

இதுகுறித்து தலைமைஆசிரியர் தேவிகாராணி கூறுகையில்,  2017 ஜூன் வரை ஊராட்சி ஒன்றியம் மூலம் கழிப்பறைகளை தூய்மைப்படுத்த ரூ.2,000 வழங்கப்பட்டது. பள்ளி பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் இருப்பதால் நிதியை நிறுத்திவிட்டனர். தற்போது எங்களது சொந்த செலவில் ஒருவரை நியமித்துள்ளோம். அவர் முடிந்தளவு தூய்மை செய்து வருகிறார் என்றார்.

Tags:    

Similar News