சிவகங்கை மாவட்டத்தில் வேளாண் கருவிகளை வழங்கிய அமைச்சர் பெரியகருப்பன்
சிவகங்கை மாவட்டத்தில் நடந்த விழாவில் வேளாண் கருவிகளை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்.
தமிழ்நாடு முதலமைச்சர், காணொளி காட்சி வாயிலாக, விவசாயிகளுக்கு பவர் டில்லர் இயந்திரங்களை வழங்கி தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து, சிவகங்கை மாவட்டத்தில் வேளாண்மை பொறியியல் துறையின் சார்பில் மொத்தம் 145 விவசாயிகளுக்கு ரூ.3.07 கோடி மதிப்பீட்டில் மானிய விலையிலான பவர் டில்லர் மற்றும் பவர் வீடர் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது என கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார்.
கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட தனியார் மண்டபத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், தலைமையில், வேளாண்மை பொறியியல் துறையின் சார்பில் விவசாயிகளுக்கு, மானிய விலையிலான பவர் டில்லர் மற்றும் பவர் வீடர் இயந்திரங்களை வழங்கி பேசியதாவது:-
கருணாநிதி ஆட்சி காலத்தில் விவசாயிகளுக்கு பயனுள்ள வகையில் எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு விவசாயிகளின் நலன் காக்கப்பட்டு வந்தது. அச்சமயம் கடந்த 2006ஆம் ஆண்டில் கருணாநிதி 7,000 கோடி விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டு, அத்திட்டம் ஒன்றிய அரசிற்கும் மாதிரியாக திகழப்பட்டது குறிப்பிடதக்கதாகும். அவ்வழியில், விவசாய பெருங்குடி மக்களின் நலன் காக்கின்ற வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் , விவசாய தொழிலினை மேலை நாடுகளுக்கு இணையான நவீன தொழில்நுட்பங்களுடன் விவசாயிகளுக்கான எண்ணற்ற திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்தி விவசாயிகளின் உற்ற தோழனாக திகழ்ந்து வருகிறார்.
மேலும், விவசாயிகளுக்கு பொருளாதார ரீதியாக உதவும் பொருட்டு, அதற்கான நிதி ஆதாரங்களை கூட்டுறவுத்துறையி்ன் மூலம் வழங்கிடும் நோக்கில் கடந்தாண்டு 12,000/- கோடி அளவில் பயிர் கடன் வழங்கிட இலக்கீடு நிர்ணயிக்கப்பட்டு, அதற்கு கூடுதலா 13,500/- கோடி மதிப்பீட்டிலான பயிர் கடன்கள் வழங்கப்பட்டது. அதனடிப்படையில் இந்த ஆண்டும் ரூ.15,000/- கோடி மதிப்பீட்டில் பயிர் கடன்கள் வழங்கிடவும் அரசால் இலக்கீடு நிர்ணயம் செய்யப்பட்டு அதற்கான நடவடிக்கைகளும் கூட்டுறவுத்துறை ரீதியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பயிர் கடன் பெறுவதில் ஏதேனும் சிரமங்கள் ஏற்படின், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களையோ அல்லது இணைப்பதிவாளர் அவர்களையோ விவசாயிகள் நேரில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
இதுபோன்று, வேளாண்மைத்துறை, தோட்டக்கலை (ம) மலைப்பயிர்கள் துறை, வேளாண் பொறியியல் துறை போன்ற துறைகள் வாயிலாகவும் பல்வேறு திட்டங்கள் விவசாயிகளுக்கு பயனுள்ள வகையிலும் மானிய விலையிலும் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் , விவசாயிகளுக்கான புதிய மின் இணைப்புக்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு முதலமைச்சர், ஆட்சி பொறுப்பேற்ற கடந்த இரண்டு ஆண்டுகளில் இரண்டு இலட்ச விவசாயிகளுக்கு மின் இணைப்புக்கள் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கதாகும். இதுபோன்று விவசாய பெருங்குடி மக்களுக்கு பயனுள்ள வகையில் எண்ணற்ற திட்டங்கள் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு, மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில், தமிழகம் தன்னிறைவு பெற்ற மாநிலமாக உருவெடுத்துள்ளது.
இன்றைய தினம், தமிழ்நாடு முதலமைச்சர், வேளாண்மை பொறியியல் துறையின் சார்பில் விவசாயிகளுக்கு பவர் டில்லர், விசை களையெடுப்பான் உள்ளிட்ட வேளாண் கருவிகளை சென்னை தலைமைச்செயலகத்தில் விவசாயிகளுக்கு வழங்கி தொடங்கி வைத்துள்ளார்கள்.
அதனைத்தொடர்ந்து, சிவகங்கை மாவட்டத்தில் வேளாண்மை பொறியியல் துறையி்ன் சார்பில், வேளாண்மை இயந்தியரமயமாக்கல் திட்டம் 2023-2024ன் கீழ் மானிய விலையில் பவர் டில்லர் மற்றும் பவர் வீடர் இயந்திரங்களை விவசாயிகளுக்கு வழங்கும் விழா திருப்பத்தூர் மற்றும் மானாமதுரையில் சிறப்பாக நடைபெறுகிறது.
அதில் ,திருப்பத்தூரில் நடைபெறும் விழாவின் மூலம் 68 விவசாயிகளுக்கும், மானாமதுரையில் நடைபெறும் விழாவின் மூலம் 77 விவசாயிகளுக்கும் என, மொத்தம் 145 விவசாயிகளுக்கு தலா ரூ.2,12,000/- வீதம் மொத்தம் 3,07,40,000/- மதிப்பீ்ட்டில் மானிய விலையிலான பவர் டில்லர் மற்றும் பவர் வீடர் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது. இதில், சிறு விவசாயிகளுக்கு ரூ.85,000/- மானியத்தொகையும், பெரு விவசாயிகளுக்கு ரூ.70,000/- மானிய தொகையும் மற்றும் ஆதிதிராவிடர் பிரிவை சார்ந்த விவசாயிகளுக்கு ரூ.1,19,000/- மானியத்தொகையும் வழங்கப்படுகிறது.
இதுபோன்று விவசாயிகளுக்கு, பயனுள்ள வகையில் பல்வேறு நலத்திட்டங்களை விவசாயிகள் முழுமையாக அறிந்து கொண்டு அத்திட்டத்தின் மூலம் பயன்பெறுவதற்கென துறை சார்ந்த அலுவலர்களை முறையாக அணுகி, பயன்பெற வேண்டும் என, கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், திருப்பத்தூர் பேரூராட்சித் தலைவர் கோகிலாராணி, வேளாண்மை பொறியியல் துறை உதவி செயற் பொறியாளர் கே.முத்துக்குமார், வேளாண்மைத்துறை துணை இயக்குநர் பன்னீர்செல்வம். தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் ரேகா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் , பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், விவசாய பெருங்குடி மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.