சிவகங்கை மாவட்ட அரசு பள்ளியில் கணினி அறை புதிய கட்டிடம் திறப்பு
சிவகங்கை மாவட்ட அரசு பள்ளியில் கணினி அறை புதிய கட்டிடத்தை மாவட்டஆட்சியர் மதுசூதன் ரெட்டி திறந்து வைத்தார்.;
அரசு பள்ளி மாணவர் ஒருவருக்கு சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி ஊக்க தொகை வழங்கினார்.
சிவகங்கை மாவட்டம் சாத்தனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கொடையாளர் பங்களிப்புடன் ரூ.18.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள கணினி வகுப்பறை கட்டிடத்தினை, மாவட்ட ஆட்சித்தலைவர் மதுசூதன் ரெட்டி, திறந்து வைத்தார்.
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சாத்தனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில், கொடையாளர் பங்களிப்புடன் புதிதாக கட்டப்பட்டுள்ள கணினி வகுப்பறை கட்டிடத்தினை, மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, திறந்து வைத்தார்.
அப்போது மாவட்ட ஆட்சியர் பேசும்போது கூறியதாவது:-
தமிழ்நாடு முதலமைச்சர், பள்ளிக்கல்வித்துறையில் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி மாணாக்கர்களின் நலன் காத்து வருகிறார்கள். திட்டங்கள் மட்டுமன்றி அனைத்துப் பள்ளிகளிலும் உட்கட்டமைப்பு வசதிகளும் மேம்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நம் பள்ளி, நம் பெருமை என்ற திட்டம் தமிழ்நாடு முதலமைச்சரால், தொடங்கி வைக்கப்பட்டு, அதில் ,நம் பள்ளி பவுண்டேசன் மூலம் அரசுப்பள்ளிகளில் பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில், இளையான்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சாத்தனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் புதிதாக ரூ.18.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள கணினி வகுப்பறை கட்டிடத்தில் தனது பங்களிப்பை அளித்திடும் பொருட்டு, இப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர் க.செல்வம், அத்தொகையை நன்கொடையாக இப்பள்ளிக்கு வழங்கி, பெருமை சேர்த்துள்ளார். தான் பயின்ற பள்ளியில் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு தனது பங்களிப்பையும் அளித்திட வேண்டும் என்ற அவரது நல்உள்ளத்திற்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இதுபோன்று மாவட்டத்திலுள்ள அரசுப்பள்ளிகளில் பயின்ற முன்னாள் மாணவர்கள் அப்பள்ளிகளின் மேம்பாட்டிற்கு உறுதுணையாக இருந்திட முன்வர வேண்டும்.
சாத்தனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வரும் இவ்விழாவில் ஆசிரியர்கள், மாணாக்கர்கள் மட்டுமன்றி மாணாக்கர்களின் பெற்றோர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மற்றும் உறுப்பினர்கள், முன்னாள் மாணவர்கள்;, குறிப்பாக பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டுள்ளது. இப்பள்ளியின் நிர்வாகத்திற்கு பெருமை சேர்க்கின்ற ஒன்றாகும்.
சிவகங்கை மாவட்டத்தில் மொத்தம் 67 மேல்நிலைப்பள்ளிகளில் 23 மேல்நிலைப்பள்ளிகள் 100 சதவிகிதம் தேர்ச்சி விகிதத்தை எட்டியுள்ளது. அந்த 23 பள்ளிகளில் சாத்தனூர் மேல்நிலைப்பள்ளியும் ஒன்றாகும்.
தமிழ்நாடு முதலமைச்சரால், தொடங்கி வைக்கப்பட்டுள்ள நம் பள்ளி, நம் பெருமை திட்டத்தின் கீழ், வகுப்பறை பற்றாக்குறை உள்ள பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கு அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்கள். அதன்படி, மாவட்டத்தில் தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகள் மொத்தம் 58 பள்ளிகளில் 120 வகுப்பறைக் கட்டிடங்கள் தற்போது, கட்டப்பட்டு வருகிறது. இதேபோன்று, மேல்நிலை மற்றும் உயர்நிலைப்பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைக் கட்டிடங்கள் கட்டுவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. அதில், இப்பள்ளியும் ஒன்றாகும். மேலும், இத்திட்டத்தின் கீழ் பள்ளிகளில் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகள், கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் மற்றும் சுற்றுச்சுவர் அமைத்தல் உள்ளிட்ட வசதிகளும் மேம்படுத்தப்படவுள்ளன.
அரசுப்பள்ளிகளில் அனைத்து வசதிகளும் மேம்படுத்தப்பட்டு திறன்மிக்க ஆசிரியர்களைக் கொண்டு, மாணாக்கர்களின் எதிர்காலம் சிறந்து விளங்கிடும் வகையில், தமிழக அரசால் சிறப்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாணாக்கர்கள் படிப்பு மட்டுமன்றி, தங்களது தனித்திறனையும் வெளிக்கொணரச் செய்து, அதில் சாதித்து காட்ட வேண்டும். இதற்கு பெற்றோர்களும் தங்களது பங்களிப்பை முழுமையாக அளித்து, தங்களின் குழந்தைகளுக்கு உறுதுணையாக இருந்திட வேண்டும்.
குறிப்பாக, பெண் குழந்தைகள் கண்டிப்பாக பட்டப்படிப்பினை படிக்க வேண்டும் என்ற தொலைநோக்கு சிந்தனையுடனும், பெண் கல்வியை ஊக்குவிக்கும் பொருட்டும், தமிழ்நாடு முதலமைச்சர், புதுமைப்பெண் திட்டத்தை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தியுள்ளார். இதனைக் கருத்தில் கொண்டு, மாணவியர்கள் தங்களது உயர்கல்விக்கான திட்டத்தினை தற்போது முதலே சிந்தித்து சிறந்து விளங்கிட வேண்டும்.
மாணாக்கர்களின் எதிர்கால திட்டம் குறித்து, அதற்கான வழிகாட்டுதலை தங்களது பள்ளிப்படிப்பின் போதே தமிழக அரசு உங்களுக்கு வழங்கி வருகிறது. இதனைக் கருத்தில் கொண்டு, அரசு வேலை, தனியார் வேலை, சுயதொழில் தொடங்கி பயன்பெறுதல் உள்ளிட்டவைகளை தங்களது திறன் மற்றும் ஆர்வத்தின் அடிப்படையில் தங்களுக்கான துறையை தேர்ந்தெடுத்து, அதில் சிறந்து விளங்கி சாதனையாளர்களாக திகழ்ந்திட வேண்டும்.
இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டிதெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், சாத்தனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 2021-2022-ஆம் கல்வியாண்டில் 10-ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு, முன்னாள் பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் பாஸ்கரன், நினைவாக, அவரது மகன் செந்தில் அவர்கள் சார்பில் வழங்கப்பட்டஊக்கத் தொகையினையும், மற்றும் நடப்பாண்டில் மாணாக்கர்களுக்கு நடைபெற்று வரும் திருப்புதல் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்ற மாணாக்கர்களை ஊக்குவிக்கும் பொருட்டு புத்தகங்களையும், மாநில அளவில் நடைபெற்ற வாள் சண்டை போட்டியில் இப்பள்ளியின் சார்பில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணாக்கர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா.சுவாமிநாதன், கொடையாளர் க.செல்வம் (சீவலாதி), உதவி திட்ட அலுவலர் (ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி) ஏ.பீட்டர் லெமாயு, சாத்தனூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஆ.சுப்பிரமணியன், ஊராட்சி மன்றத்தலைவர்கள் சரளா ராஜ்குமார் (சாத்தனூர்), பழனியம்மாள் சுப்பிரமணியன் (சீவலாதி), ஜெயக்குமார் (பூலாங்குடி), ஒன்றியக்குழு உறுப்பினர் மலையரசி மற்றும் மாணாக்கர்களின் பெற்றோர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மற்றும் உறுப்பினர்கள், முன்னாள் மாணவர்கள்;, பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.