சிவகங்கை அருகே உலக சாதனைக்கு முயற்சி செய்த அரசு பள்ளி மாணவர்கள்
திருக்குறள் சொல்லிக் கொண்டே தேசிய மூவர்ணக்கொடியை வடிவமைத்தலில் உலக சாதனை முயற்சியை மாணவர்கள் மேற்கொண்டனர்;
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே உள்ள சொக்கநாதபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் பள்ளிக்
கல்வித்துறையின் சார்பில், காளையார்கோவில் வட்டாரத்தைச் சேர்ந்த சொக்கநாதபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சியர் ப.மதுசூதன் ரெட்டி தலைமையில் நடைபெற்ற, திருக்குறள் சொல்லிக் கொண்டே உலக சாதனை முயற்சி விழாவை கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் துவக்கி வைத்து பேசியதாவது:
தமிழ்நாடு முதலமைச்சர், பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர்கல்வித்துறையில், எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி யும், மாணாக்கர்களின் தனித்திறன்களை வெளிக்கொணரும் வண்ணமும், தொலைநோக்கு பார்வையுடன் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.
அந்தவகையில், சிவகங்கை மாவட்டத்தில் வரலாற்றச் சுவட்டில் பொறிக்கின்ற வகையில், மாணாக்கர்கள் தங்களது தனித்திறன்களை வெளிப்படுத்தி வருகிறார்கள். அதனடிப்படையில், க.சொக்கநாதபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 1-ம் வகுப்பு பயிலும் மாணவன் அபிமன்யு மற்றும் அவருடன் இணைந்து 133 மாணவச் செல்வங்கள் 1330 திருக்குறள் சொல்லிக் கொண்டே தேசிய மூவர்ணக்கொடியை வடிவமைத்தல் மற்றும்ஆகியவைகளை நிகழ்த்தி, உலக சாதனை முயற்சியினை மேற்கொண்டுள்ளார்கள்.
நாங்கள் பல்வேறு வகையான அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்று, பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைப்பது மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குவது போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்றாலும், இதுபோன்று மாணாக்கர் களின் தனித்திறன்களை வெளிக்கொணரும் வகையில், மேற்கொள்ளப்படும் இவ்உலக சாதனை முயற்சி விழாவில் பங்கேற்பது மிகுந்த மனநிறைவை அளிக்கிறது. இந்தியாவிற்கு வலுச்சேர்க்கின்ற வகையில், அடிப்படையாக திகழ்ந்து வரும் எதிர்காலச் சந்ததியினர்களுக்கு இதுபோன்ற நிகழ்வுகளும் முன்னுதாரணமாக திகழ்கிறது.குறிப்பாக, தமிழகத்தில் சிவகங்கை மாவட்டத்தைச் சார்ந்த மாணாக்கர்கள் வரலாற்றுப் பக்கங்களில் இடம் பெறுகின்ற வகையில், மேற்கொள்ளப்படும் இம்முயற்சிகள் பெருமைக்குரிய ஒன்றாகும்.
1-ம் வகுப்பு பயிலும் 6 வயதுடைய செல்வன் அபிமன்யு , தற்போது 1-ம் வகுப்பு பயின்று வருகிறார். அவர் தற்சமயம் வரை 7 பட்டங்களைப் பெற்று சாதனை படைத்துள்ளார். அவருடைய திறமையை வெளிக்கொணரச் செய்ய அடிப்படையாக இருந்த அவரது பெற்றோருக்கும் மற்றும் உறுதுணையாக இருந்த அனைவருக்கும் இத்தருணத்தில் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவரைப்போன்ற மாணவரை கருத்தில் கொண்டு, படிப்பில் மட்டுமன்றி தங்களது தனித்திறன்களை வெளிக்கொணரச் செய்யும் வகையில், அனைத்து மாணாக்கர்களும் சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு, வரலாற்றுப் பக்கங்களில் இடம்பெற வேண்டும் என்றார் கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன்.
இதையடுத்து, அமைச்சர், தனது சொந்த நிதியிலிருந்து செல்வன்.அபிமன்யு அவர்களுக்கு ரூ.25,000 ஊக்கத்தொகையாக வழங்கி, மேலும் திருக்குறள் சொல்லிக் கொண்டே உலக சாதனை முயற்சியில் பங்கு பெற்றுள்ள மாணாக்கர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா.சுவாமிநாதன், காளையார்கோவில் ஒன்றியப் பெருந்தலைவர் ப.இராஜேஸ்வரி, மாவட்டக்கல்வி அலுவலர் ப.சண்முகநாதன், தலைவர், கலாம் உலகச்சாதனை அமைப்பு டி.குமரவேல், தலைவர், கவசம் அறக்கட்டளை பி.அனீஷ்குமார், சொக்கநாதபுரம் ஊராட்சி மன்றத்தலைவர் மு.கண்ணன், தலைமை ஆசிரியை திருமதி சி.விஜயலெட்சுமி, ஆசிரியர்கள் மற்றும் மாணாக்கர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.