சிவகங்கை மாவட்டத்தில் கூட்டுறவு வார விழா
கூட்டுறவுத்துறை சார்பில், கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு, இன்று சிவகங்கை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ரத்ததான முகாமை, கலெக்டர் மதுசூதன் ரெட்டி, தொடங்கி வைத்து பார்வையிட்டார்.;
69-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா-2022-ஐ முன்னிட்டு, அதன் ஒருபகுதியாக இன்றையதினம் இரத்ததான முகாமினை கலெக்டர் மதுசூதன் ரெட்டி, தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
'கூட்டுறவே நாட்டுயர்வு' என்ற அடிப்படையில், தமிழக அரசு, கூட்டுறவுத்துறையின் சார்பில் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தமிழகம் முழுவதும் கூட்டுறவுத்துறையின் சார்பில், தற்போது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நடைபெற்று வருகிறது.
அதன்படி, சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 14ம் தேதி அன்று கூட்டுறவு வார விழா கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டு, ஒருவாரத்துக்கு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்திட திட்டமிடப்பட்டு, அதனடிப்படையில் முதல்நாள் நிகழ்வாக, பையூர் பிள்ளைவயல் கூட்டுறவு சங்கத்தின் சார்பில், புதூர் நாடக மேடையில் கூட்டுறவுத்துறையின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த தெருக்கூத்து நிகழ்ச்சியும், சிவகங்கை கூட்டுறவு சங்க அலுவலகத்தில் மரம் நடும் விழாவும் நடைபெற்றது.
அதனைத்தொடர்ந்து, 15 ம் தேதி அன்று, சிவகங்கை ஒருங்கிணைந்த கூட்டுறவு வளாகத்தில் உள்ள கூட்டுறவு பயிற்சி நிலையத்தில் பயின்று வரும் மாணாக்கர்களிடையே பேச்சுப் போட்டிகள் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக, நேற்று (16ம் தேதி) பொதுமக்கள் மற்றும் கூட்டுறவுத்துறையை சார்ந்த அலுவலர்கள் பங்கு பெற்ற இரத்ததான முகாம் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரியில் நடைபெற்றது. மேலும், சிவகங்கை ராஜ் மஹாலில் கூட்டுறவு சேவை குறித்து சிறப்பு பட்டிமன்றமும் நடைபெற்றது.
இன்று, இடையமேலூர் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தின் சார்பில், கால்நடை மருத்துவ முகாமும் மற்றும் மன்னர் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மாணாக்கர்களிடையே ஓவியப்போட்டிகளும் நடைபெற்றது. நாளை, 18ம் தேதி அன்று காரைக்குடி தேவேந்திர குல வேளாளர் மஹாலில் பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில் பொது மருத்துவ முகாமும், 19ம் தேதியன்று, இளையான்குடி கூட்டுறவு மற்றும் காரைக்குடி கூட்டுறவு நகர வங்கி உறுப்பினர்கள் சந்திப்பு முகாமும் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.
அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவின் நிறைவாக, 20ம் தேதி அன்று திருப்பத்தூரில் உள்ள தனியார் மண்டபத்தில், கூட்டுறவு வார நிறைவு விழா நிகழ்ச்சியினை துறைரீதியாக நடத்திடவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இன்று நடைபெற்ற மருத்துவ முகாமில், கூட்டுறவுத்துறை இணைப்பதிவாளர் ஜீனு, இணைப்பதிவாளர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ரவிச்சந்திரன், சிவகங்கை சரக துணைப்பதிவாளர் பாலசந்திரன், இணைப்பதிவாளர் மற்றும் பணியாளர் அலுவலர் நாகராஜன், துணைப்பதிவாளர் (பொது விநியோகத் திட்டம்) குழந்தைவேலு, சிவகங்கை மருத்துவக் கல்லூரி துணை முதல்வர் சர்மிளா திலகவதி, மருத்துவக் கண்காணிப்பாளர் ராமநாதன், உதவி நிலைய மருத்துவர் முகம்மதுரபி, அவசர சிகிச்சைப்பிரிவு பேராசிரியர் ரவிச்சந்திரன் மற்றும் கூட்டுறவுத்துறை அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.