சிவகங்கை மாவட்டத்தில் கணினி பட்டா சிட்டா திருத்த சிறப்பு முகாம்: ஆட்சியர் தகவல்
சிவகங்கை மாவட்டத்தில் நாளை(ஏப்.22) நடைபெறவுள்ள கணினி திருத்த சிறப்பு முகாமினை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்;
சிவகங்கை மாவட்டத்தில் நாளை(வெள்ளிக்கிழமை) பட்டா தொடர்பான திருத்தங்களை மேற்கொள்ள நடைபெறவுள்ள கணினி திருத்தசிறப்பு முகாமினை, பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி. தெரிவித்துள்ளார்.
அரசின் சேவைகள் பொதுமக்களின் இருப்பிடங்களுக்கே கொண்டு செல்லும் அரசின் கொள்கையின் ஒரு அங்கமாக ஒவ்வொரு வருவாய் கிராமத்திலும், விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளர்களின் பட்டா தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் கணினி திருத்த சிறப்பு முகாம் ஒவ்வொரு வாரமும் புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நடைபெறவுள்ளது. அதன் தொடர்ச்சியாக, 22.04.2022 அன்று தேவகோட்டை வட்டத்தில் எழுவன்கோட்டை, களத்தூர் மற்றும் பூசலாக்குடி குரூப்-நம்பியூர் கிராமங்களிலும், திருப்பத்தூர் வட்டத்தில் ஒழுகமங்கலம் மற்றும் இரணசிங்கபுரம் கிராமங்களிலும், சிவகங்கை வட்டத்தில் பில்லூர் மற்றும் இலுப்பக்குடி கிராமங்களிலும், காளையார்கோவில் வட்டத்தில் காளையார்கோவில் கிராமத்திலும் நடைபெறவுள்ளது.
எனவே, பொதுமக்கள் மேற்படி வருவாய் கிராமங்களில் நடைபெறும் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கை குறித்த மனுக்களை அளித்து பயன்அடைந்து கொள்ளுமாறு சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ப.மதுசூதன் ரெட்டி கேட்டுக் கொண்டுள்ளார்.