சிவகங்கையில் வாக்காளர் விழிப்புணர்வு வடிவமைப்பை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர்
தோட்டக்கலைத் துறையின் சார்பில் காய்கறிகளால் அமைக்கப்பட்டிருந்த வாக்காளர் விழிப்புணர்வு வடிவமைப்பினை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித், பார்வையிட்டார்
மக்களவை தேர்தல் 2024 முன்னிட்டு, வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திடும் நோக்கில், சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில், தோட்டக்கலைத் துறையின் சார்பில் காய்கறிகளால் அமைக்கப்பட்டிருந்த வாக்காளர் விழிப்புணர்வு வடிவமைப்பினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித், பார்வையிட்டு தெரிவிக்கையில்,
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தமிழகத்திற்கு மக்களவை தேர்தல் ஒரே கட்டமாக தேர்தல் நடத்திடும் பொருட்டு, வருகின்ற ஏப்ரல்-19ம் தேதியன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அதன்படி, சிவகங்கை மாவட்டத்தில் பொதுமக்கள் 100 சதவீதம் தங்களது வாக்கினை பதிவு செய்திடும் பொருட்டு ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்களர்களிடையே வாக்களிப்பதன் அவசியம் குறித்து, பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, இன்றைய தினம் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில், தோட்டக்கலைத் துறையின் சார்பில் வாக்காளர்களுக்கு வாக்களிப்பது அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது தொடர்பாக காய்கறி வகைகளைக் கொண்டு சிறப்பான வடிவமைப்பு அமைக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு வருகின்ற பொதுமக்கள் இதனை எளிதில் பார்த்து, வாக்களிப்பதன் அவசியம் குறித்து, அறிந்து கொள்கின்ற வகையில், இவ்வகையான விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் முதன்முறையாக வாக்களிக்க உள்ள இளம் வாக்காளர்கள், தங்களது வாக்குரிமையை நிலைநாட்டுகின்ற வகையில், அனைவரும் வருகின்ற ஏப்ரல்-19ஆம் தேதியன்று தவறாமல் வாக்களித்திட வேண்டும்.
இதுபோன்று, பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகள் மாவட்டம் முழுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனை அனைத்து வாக்காளர்களும் கருத்தில் கொண்டு, நடைபெறவுள்ள தேர்தலில் 100 சதவீதம் வாக்களித்து,நமக்கான மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கான பொறுப்புக்களை உணர்ந்து தங்களது வாக்குரிமையை நிலைநாட்டி, ஜனநாயக கடமையாற்றிட வேண்டும் என தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து ,சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் பொதுமக்களுக்கு வாக்காளர் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரியின் முதல்வர் மரு. சத்தியபாமா, துணை இயக்குநர் (தோட்டக்கலைத்துறை) குருமணி, மாவட்ட வழங்கல் அலுவலர் சபீதாள் பேகம், சிவகங்கை வட்டாட்சியர் சிவராமன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.