கால்நடை காப்பீடு திட்டத்தில் பயன்பெற, விவசாயிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்

தேசிய கால்நடை காப்பீடு திட்டத்தின் கீழ், விவசாயிகள் கால்நடைகளை காப்பீடு செய்து பயன்பெறலாம் என, கலெக்டர் மதுசூதன் ரெட்டி, தெரிவித்துள்ளார்.;

Update: 2022-11-19 11:41 GMT

கால்நடைகளை காப்பீடு செய்ய, கலெக்டர் மதுசூதன் ரெட்டி, விவசாயிகளுக்கு வலியுறுத்தல்.

சிவகங்கை கலெக்டர் மதுசூதன் ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சிவகங்கை மாவட்ட வேளாண் குடிமக்கள், தங்களது வளர்ப்பில், பராமரிப்பில் உள்ள கால்நடைகளை பாதுகாத்திட 2022-2023-ம் ஆண்டிற்கான தேசிய கால்நடை காப்பீடு திட்டத்தின் கீழ், கால்நடைகளை காப்பீடு செய்து பயன்பெறலாம்.1100 அலகுகள் குறியீடாக பெறப்பட்டுள்ள இம்மாவட்டத்தில், விருப்பம் உள்ள கால்நடை வளர்க்கும் விவசாயிகள் தங்கள் கால்நடைகளை அரசு மானியத்துடன்  காப்பீடு செய்திட அருகிலுள்ள அரசு கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரை அணுகி, தங்கள் கால்நடைகளை காப்பீடு செய்து கொள்ளலாம்.

அரசு மானியமாக வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்களுக்கு, காப்பீடு சந்தாத்தொகையில் 70 சதவீத மானியமும் பொதுப் பிரிவினர்களுக்கு 50 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது.

காப்பீடு செய்யப்படும் கால்நடைகளுக்கு, காது வில்லைகள் பொருத்தப்படும். காப்பீடு செய்யப்பட்ட கால்நடைகள் இறக்க நேரிட்டால், கால்நடை உதவி மருத்துவரால் காதுவில்லைக்குரிய இறந்த கால்நடையை பரிசோதனை செய்து அதற்கான, சான்றிதழுடன் காப்பீடு நிறுவனத்திலிருந்து, காப்பீடு தொகை பெற்றுக் கொள்ளலாம். இத்திட்டத்தில், கால்நடை வளர்ப்போர் தங்கள் கால்நடைகளை காப்பீடு செய்து பயன்பெறலாம் என,கலெக்டர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

மேலும், இத்திட்டம் தொடர்பான தகவல்கள் பெற தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி மற்றும் கைப்பேசி எண்கள்:

1.உதவி இயக்குநர்,கால்நடை பராமரிப்புத்துறை, சிவகங்கை - 94450 32581

2.உதவி இயக்குநர், கால்நடை பராமரிப்புத்துறை, காரைக்குடி - 94450  32556

ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Similar News