பெரியம்மாவை உருட்டுக் கட்டையால் அடித்துக் கொலை செய்த ஆட்டோ டிரைவர் கைது
மானாமதுரை அருகே குடிபோதையில் பெரியம்மாவை உருட்டுக் கட்டையால் அடித்துக் கொலை செய்த ஆட்டோ ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர்;
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே மேலமேல்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி பிச்சையம்மாள் (78) இவருக்கு குழந்தைகள் இல்லை. ஆறுமுகத்தின் இரண்டாவது மனைவி மகன் கலைச்செல்வன்(36). இவர் தனது தாய், மனைவி குழந்தைகளுடன் மதுரை மாவட்டம் இளமனூரில் வசித்து வருகிறார். பிச்சையம்மாள் கலைச்செல்வன் இடையே சொத்துத் தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இளமனூரிலிருந்து குடிபோதையில் ஆட்டோவில் மேலமேல்குடி கிராமத்திற்கு வந்த கலைச்செல்வன் பெரியம்மா பிச்சையம்மாள் வீட்டிற்கு சென்று அவருடன் தகராறு செய்துள்ளார். அப்போது ஆத்திரமடைந்த கலைச்செல்வன் உருட்டுக்கட்டையால் பிச்சையம்மாளை தலையில் தாக்கியதில்அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மானாமதுரை போலீசார் இந்த கொலைச் சம்பவம் குறித்து வழக்குப் பதிந்து கலைச்செல்வனை கைது செய்தனர்.
பிச்சையம்மாள் உடல் மானாமதுரை அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.