தேவகோட்டை அருகே வீடு இடிந்து விழுந்து தொழிலாளி பலி
பழைய வீடுகளை இடித்து அந்த வீட்டில் உள்ள மரம் மற்றும் பொருட்களை வாங்கி விற்கும் தொழிலை செய்து வந்தார்.;
பைல் படம்.
தேவகோட்டை எஸ்.எம்.எல் தெருவில் வசிக்கும் வடிவேல் மகன் ராஜேந்திரன் (62) இவர் மனைவி லட்சுமி மகன் ராம்குமார், பெரியநாயகம் ஆகியோருடன் வசித்து வந்தார். இவர் பழைய வீடுகளை இடித்து அந்த வீட்டில் உள்ள மரம் மற்றும் பொருட்களை வாங்கி விற்கும் தொழிலை செய்து வந்தார். மேலும் தேவகோட்டை மற்றும் சுற்றியுள்ள கிராம பகுதிகளில் உள்ள வீடுகளை இடித்து அவற்றிலுள்ள பொருட்களை வாங்குவதற்காக இரவு பகலாக பணியாளர்களை கொண்டு வேலை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் இன்று காலை கருணாநிதி மண்டபம் அருகே உள்ள வெள்ளையன் செட்டியார் அவரின் பழைய வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் அக்கம் பக்கத்தினர் தேவகோட்டை நகர காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தேவகோட்டை துணை கண்காணிப்பாளர் ரமேஷ், தேவகோட்டை தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தார். தீயணைப்பு துறையினர் தலைமையில் காவல்துறையினர் இடிபாடுகளுக்கு இடையே கிடந்த ராஜேந்திரன் உடலை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். இறந்தவரின் உடல் நான்கு நாட்கள் ஆன நிலையில் துர்நாற்றம் மற்றும் உடல் அழுகிய நிலையில் உள்ளதால் சம்பவ இடத்திலேயே பிரேத பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.