நீதிமன்றத்தில் வழக்கு உள்ளபோது விவசாய நிலத்தை அளவிட வந்த வட்டாட்சியரை முற்றுகையிட்டு போராட்டம்

நீதிமன்ற தடையாணை இருக்கும் போது நிலத்தை அளக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்து மருதவயல் கிராமவிவசாயிகள் தாசில்தாரை முற்றுகையிட்டும், நிலத்தில் அமர்ந்தும் போராட்டம் நடத்தினர்.;

Update: 2021-07-13 12:23 GMT

நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் போது, விவசாய நிலத்தை ஓடை என கூறி, அளவிட வந்ததாக தேவகோட்டை வட்டாட்சியரை மருதவயல் கிராம விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே மருதவயல் கிராம பகுதியில் திருவாடனை தாலுகாவை சேர்ந்த சிலர் விவசாயம் செய்து வருகின்றனர்.அவர்கள் விவசாயம் செய்யும் நிலம் கிராம கணக்கில் ஓடை புறம்போக்கு என பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அதற்கான முறையான ஆவணங்கள் கிராம கணக்கில் இல்லை என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், சம்பந்தப்பட்ட இடத்தை அரசு கணக்கில் சேர்க்க வட்டாட்சியர் ராஜரத்தினம் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இதனை எதிர்த்து, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த விவசாயிகள், நிலத்தை அளந்து அரசு கையகப்படுத்த தடையாணை பெற்றனர். இந்நிலையில், நிலத்தை அளக்க ஜேசிபி இயந்திரத்துடன் வட்டாட்சியர் ராஜரத்தினம் தலைமையில் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். ஆனால்,  நீதிமன்ற தடையாணை இருக்கும் போது நிலத்தை அளக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்து  மருதவயல் கிராமவிவசாயிகள் தாசில்தாரை முற்றுகையிட்டும், நிலத்தில் அமர்ந்தும் போராட்டம் நடத்தினர். இதனால் சம்பவ இடத்திற்கு போலீசார் பாதுகாப்புக்காக வரவழைக்கப்பட்டனர்.

தகவலறிந்த, தேவகோட்டை கோட்டாட்சியர் பிரபாகர் ஆவணங்களுடன் விவசாயிகளை விசாரணைக்கு அழைத்ததன் பேரில், நிலத்தை அளப்பது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

Tags:    

Similar News