விவசாயக்கூலியிடம் லஞ்சம் வாங்கும் கிராம நிர்வாக அலுவலர்: சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே விவசாய கூலியிடம் சிட்டஅடங்கல் நகல்வழங்க கிராம நிர்வாக அலுவலர் லஞ்சம் வாங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது
தேவகோட்டை அருகே உள்ள மேலச்செம்பொன்மாரி கிராம நிர்வாக அலுவலர் கோபி கண்ணன் என்பவர், ஆறாவயல் சண்முகநாதபுரத்தை சேர்ந்த பாண்டி என்ற விவசாய கூலியை 10 நாட்களாக பட்டா, சிட்டா, அடங்கல், காப்பி வழங்குவதற்கு அலைய விட்டுள்ளார். அதற்காக 500 ரூபாய் பணம் கொடுத்தால் மட்டுமே இதன் நகல்களை தருவதாக கிராம நிர்வாக அலுவலர் கூறினாராம்.
இதை, கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் அருகே வசிக்கும் பெரியசாமி , பாண்டியை அழைத்து விசாரித்தபோது 500 ரூபாய் பணம் கேட்டு தன்னை தினமும் அலைய வைக்கிறார் என்று வேதனைப்பட்டார். இதையடுத்து, பெரியசாமி அவரிடம் 500 ரூபாய் பணத்தை கொடுக்கச் சொல்லியதுடன், பாண்டியிடம் கிராம நிர்வாக அலுவலர் கோபிகண்ணன் பணத்தை பெறுகின்ற காட்சியை தனது செல்போனில் ரகசியமாக பெரியசாமி வீடியோ எடுத்துள்ளார்.
பின்னர், அதை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார். விவசாயியிடம் லஞ்சம் பெறும் வீடியோ காட்சி வாட்ஸ் ஆப் மற்றும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவிவருகிறது.