தாலிபான்களின் வெற்றி இந்தியாவுக்கு அபாயம் : கார்த்தி சிதம்பரம் எம்.பி. கருத்து
21 -ஆம் நூற்றாண்டுக்கு பொருந்தாத சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் தாலிபான்கள்
தாலிபான்களின் வெற்றி இந்தியாவுக்கு அபாயம் : கார்த்தி சிதம்பரம் எம்.பி. கருத்து
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் கார்த்தி சிதம்பரம் எம்.பி செய்தியாளர்கள் கூட்டத்தில் மேலும் கூறியதாவது: தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியது, இந்தியாவுக்கு மோசமான பின் விளைவுகள் ஏற்படும். 21 ஆம் நூற்றாண்டிற்கு பொருந்தாத சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் தாலிபான் அமைப்பினர். அவர்கள் கொடூரமானவர்கள். இவர்களை ஐஎஸ்ஐ -தான் உருவாக்கியது.
அமெரிக்கா அவர்களுக்கு தீனி போட்டு வளர்த்தது. ஆப்கானிஸ்தானை கைப்பற்றியது போல, தாலிபான் போன்ற தீவிரவாத அமைப்புகள் பாகிஸ்தானையும் கைப்பற்றலாம். இதனால், இந்தியாவில் உள்ளவர்களிடம் தீவிரவாத தொடர்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே, இதை அபாயகரமான விஷயமாக பார்க்க வேண்டும் .சீனாவுக்கும் தலிபான்களுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. அங்கு செயல்படும் சீன தூதரகத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம். எனவே, ஆப்கானிஸ்தான் விஷயத்தை இந்தியா சாதுரியமாக கையாள வேண்டும்.
அரசியல் கட்சிகளிடையே ஒற்றுமை இருக்க வேண்டும். ஒட்டு மொத்த இந்தியாவும், இந்த விஷயத்தை அரசியல் ரீதியாக பிரித்துப் பார்க்காமல் எதிர்கொள்ள வேண்டும். தாலிபான்களின் வெற்றி இந்தியாவிற்கு அபாயகரமான விஷயமாக நான் கருதுகிறேன். கொடநாடு என்பது மர்மம் நிறைந்தது. அங்கு நடந்த விஷயங்கள் எல்லாமே மர்மமாகவே உள்ளது. விசாரணை மூலமே உண்மை தெரியவரும்.
வெள்ளை அறிக்கை குறித்து அதிமுக பேசுவது சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது. நிதியமைச்சர் கூறும் புள்ளிவிவரங்கள் தவறு என நினைத்தால், தகுந்த ஆதாரங்களுடன் புள்ளி விவரங்களை எடுத்துக்கூறாமல், வெள்ளை அறிக்கையை அதிமுக விமர்சிப்பது தவறு. மத்திய நிதியமைச்சர் கூறுவது அனைத்தும் பொய். காங்கிரஸ் கட்சி தான் பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு காரணம் என்ற குற்றச்சாட்டில் உண்மையில்லை என்பதை, நேரடியாக ஆதாரங்களுடன் விவாதிக்க நாங்கள் தயாராக உள்ளோம். பாஜகவுக்கு ஆதரவாக, காப்பீட்டுக் கழகங்கள் தனியார்மயம் ஆவதற்கு மாநிலங்களவையில் அதிமுக எதற்காக ஆதரவு அளித்தது என்பதை இபிஎஸ்- ஓபிஎஸ் இருவரும் தமிழ்நாட்டு மக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும்.
பொருளாதாரம் பாதிக்கப்பட்ட நேரங்களில் கொலை, கொள்கைகள் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. எனவே தமிழக அரசு கடுமையான நடிகை எடுக்க வேண்டும் .காவல்துறையில் காலியான இடங்களை நிரப்ப வேண்டும். அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பதற்கு வரவேற்கிறேன். காங்கிரஸ், திமுகவும் பலதடவை தேர்தலை ஒன்றாக சந்தித்துள்ளது. நடக்க இருக்கும் உள்ளாட்சித் தேர்தலிலும் இதே கூட்டணி தொடரும். மகத்தான வெற்றி பெறுவோம் என்றார் கார்த்தி சிதம்பரம்.