காரைக்குடி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட துப்புரவு பணியாளர்கள்
அதிக பணி பளு இருப்பதாகக்கூறி, காரைக்குடி நகராட்சி அலுவலகத்தை துப்புரவு பணியாளர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.;
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகராட்சிக்குட்பட்ட 36 வார்டுகளில் தூய்மைப் பணியாளர்கள் வீடு வீடாக சென்று குப்பைகளை பெற்று மக்கும் குப்பை மக்காதா குப்பை என்று தரம் பிரித்து, அந்தந்த பகுதிகளில் உள்ள குப்பை கொட்டியும், தொட்டியில் சேகரித்து வந்தனர்.
இந்நிலையில், குப்பைகளை அந்தந்த பகுதிகளில் உள்ள குப்பைத் தொட்டிகளில் கொட்டாமல், ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குப்பை சேமிக்கும் கிடங்கிற்கு கொண்டு செல்ல அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதனால் மன உளைச்சல் அடைந்த தூய்மை பணியாளர்கள், குப்பை வண்டிகளுடன் காரைக்குடி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து, அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதை தொடர்ந்து தூய்மைப் பணியாளர்கள் சமாதானமடைந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.