தேவகோட்டை நகராட்சி கவுன்சிலர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு: உயர் நீதிமன்றம் உத்தரவு
தேவகோட்டை நகராட்சி கவுன்சிலர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.;
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை நகராட்சி கவுன்சிலர்கள் கே.எஸ்.சுந்தரலிங்கம், நிரோசா, எஸ்.ரமேஷ், ஆர்.ராதிகா உட்பட 15 கவுன்சிலர்கள் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர்.
அதில் தேவகோட்டை நகராட்சி தேர்தலில் எதிர்க்கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று மொத்தம் உள்ள 27 கவுன்சிலர்கள் தலைவர், துணைத்தலைவர் தேர்வு செய்ய 14 கவுன்சிலர்கள் இருந்தால் போதும். நாங்கள் 15 கவுன்சிலராக இருப்பதால் எங்களில் ஒருவர் தலைவராகவும், துணை தலைவராகவும் தேர்வாக வாய்ப்பு உள்ளது.
திமுகவை சேர்ந்தவரை தலைவர், துணைத் தலைவர்களாக தேர்வு செய்யும் நோக்கில் திமுகவினர் மிரட்டுகிறார்கள். அடையாளம் தெரியாத நபர்கள் மறைமுக தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு என்ற பேரில் பேசுகின்றனர். ஆதரவு அளிக்காவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டிவரும் எனவும் மிரட்டுகின்றனர்.
எங்களுக்கு மார்ச் 4 வரை போலீஸ் பாதுகாப்பு வழங்கவும், போலீசார் தொந்தரவு செய்யக்கூடாது என்று உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதி ஜி.கே.இளந்திரையன் விசாரித்து மனுதாரர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க தேவகோட்டை டிஎஸ்பி.,க்கு உத்தரவிட்டார்.