உயிரைக்காப்பாற்றிய பிரதமருக்கு மக்கள் ஒட்டு போடும் எண்ணத்தில் உள்ளனர்: ஹெச்.ராஜா
எத்தனை இடங்களில் வெற்றி பெறும் என்று நான் கூற மாட்டேன், வாக்கு சதவீதம் பெரிய அளவில் அதிகரிக்கும் என்றார்;
காரைக்குடியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா
உயிரை காப்பாற்றிய பிரதமருக்கு மக்கள் ஒட்டு போடும் எண்ணத்தில் உள்ளதால் உள்ளாட்சி தேர்தலில் பாஜக வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என்றார் பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா.
தமிழகத்தில நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகராட்சியில் 36 வார்டுகளில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க சுயேட்சைகள் என மொத்தம் 212 பேர் போட்டியிடுகின்றனர். 97 வாக்குசாவடி மையங்கள் அமைக்கப்பட்டு வாக்காளர்கள் காலை 7 மணி முதலே தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். காரைக்குடி இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலை பள்ளியில் பா.ஜ., மூத்த தலைவர் எச்.ராஜா தனது குடும்பத்தாருடன் வந்து வாக்களித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் ஹெச். ராஜா மேலும் கூறியதாவது: தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி 50 சதவீத இடங்களில் போட்டியிடுகிறது. திருச்சி உள்ளிட்ட பல இடங்களில் தேர்தல் பிரசாரம் செய்துள்ளேன். உற்சாகமான சூழ்நிலையே உள்ளது. பா.ஜ.க நம்பகமான வாக்கு சதவீதத்தை பெறும். எத்தனை இடங்களில் வெற்றி பெறும் என்று நான் கூற மாட்டேன். வாக்கு சதவீதம் பெரிய அளவில் அதிகரிக்கும். பாரதிய ஜனதா கட்சி எந்த இடத்திலும் பணம் கொடுக்க மாட்டார்கள். மக்கள் எங்களுக்கு ஓட்டு போடுவார்கள். உணர்வு பூர்வமாக ஓட்டு போட வேண்டும். கொரானா காலத்தில் மக்களின் உயிரை காப்பாற்றிய பிரதமருக்கு மக்கள் ஒவ்வொரு முறையும் ஓட்டு போட வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளனர் என்றார் அவர்.