கல்லல் அருகே இறந்தவரின் உடலை கொண்டு செல்ல எதிர்ப்பு: போலீஸார் சமரசம்

பட்டா இடத்தின் வழியாக உடலை எடுத்துச் செல்லக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்து ஒரு தரப்பினர் பாதையை அடைத்து வைத்தனர்

Update: 2021-09-14 10:46 GMT

சிவகங்கை மாவட்டம், கல்லல் அருகே மயானப்பாதை தொடர்பாக  கிராம மக்களிடம் சமாதானப்பேச்சு நடத்தும் போலீஸார்

கல்லல் அருகே இறந்தவரின் உடலை தங்களது பட்டா நிலத்தின்  வழியாக மயானத்திற்கு எடுத்துச் செல்ல ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து  காவல்துறையினர் நடத்திய சமாதானப் பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு காணப்பட்டது.

சிவகங்கை மாவட்டம், கல்லல் அருகே செவரக்கோட்டை, திருவள்ளுவர் தெருவை சேர்ந்த மூதாட்டி அழகம்மாள்  நேற்று முன்தினம் நள்ளிரவில் காலமானார். அவரது உடலை அடக்கம் செய்ய மயானத்திற்கு எடுத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு வந்த நிலையில், தங்கள் பட்டா இடத்தின் வழியாக உடலை எடுத்துச் செல்லக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்து, சோலைமலை மற்றும் அவரது தரப்பினர் பாதையை அடைத்து வைத்தனர்.

இதனால் இரு தரப்பிற்கும் மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது. தகவலறிந்த தேவகோட்டை டிஎஸ்பி ரமேஷ் மற்றும் தேவகோட்டை வருவாய்த்துறையினர் சம்பந்தப்பட்ட சோலைமலை தரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி தற்காலிகமாக, மூதாட்டியின் உடலை மயானத்திற்கு கொண்டு செல்ல வழி ஏற்படுத்திக் கொடுத்தனர். இதனால் இரு தரப்பு மோதல் தவிர்க்கப்பட்ட நிலையில், இறந்தவர்களின் உடலை மயானத்திற்கு எடுத்து செல்ல தங்களுக்கு நிரந்தர வழி ஏற்படுத்தித் தரவேண்டும் என்று, மூதாட்டியின் உறவினர்கள் வருவாய் துறையினரிடம் கோரிக்கை வைத்தனர்.


Tags:    

Similar News