தெலங்கானாவில் ரூ.5 கோடி மோசடி புகார்: அஇமூமுக மாநில நிர்வாகி கைது
கடந்த 2018 ஆண்டு 5 கோடியை, டாக்குமெண்ட் சார்ஜ் என்று வாங்கி ஏமாற்றியதாக அளிக்கப்பட்ட புகாரில் கைது செய்யப்பட்டார்.;
தெலங்கானாவில் ரூ. 5 கோடி மோசடி செய்த வழக்கில், அ.தி.மு.க கூட்டணியில் சட்டமன்ற தேர்தலில் திருச்சுழி தொகுதியில் போட்டியிட்ட ராஜசேகர் (எஸ்.ஆர். தேவர்) என்பவரை தெலங்கானா போலீசார் கைது செய்தனர்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியைச் சேர்ந்த ஐந்து மாவட்ட விவசாய சங்கத் தலைவர் மற்றும் அகில இந்திய மூவேந்தர் முன்னேற்ற கழக பொதுச் செயலாளராக உள்ள எஸ்.ஆர். தேவர் என்ற ராஜசேகர் என்பவரை, தெலங்கானாவில் இருந்து வந்த 5 பேர் கொண்ட போலீசார் நேற்று கைது செய்தனர். இவரை, காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், விசாரணைக்காக தெலங்கானா அழைத்துச் செல்வதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். தெலங்கானாவில் உள்ள காமிநேனி மருத்துவமனைக்கு, ரூ. 300 கோடி கடன் வாங்கித் தருவதாக கூறி, கடந்த 2018 ஆண்டு டாக்குமெண்ட் சார்ஜ் என்று ரூ.5 கோடியை வாங்கினாராம். இந்நிலையில், கடன் வாங்கி தராமல் ஏமாற்றி விட்டதாக, கிருஷ்ணபிரசாத் (எ) லெட்சுமிநாரயணன் என்பவர் அளித்த புகாரின் பேரில் தற்போது கைது செய்யப்பட்டார்.