தேவகோட்டையில் ரூ.5.68 கோடி மதிப்பீட்டில் புதிய சாலை அமைக்க ஐகோர்ட் உத்தரவு
தற்போது மழை பெய்து வருவதால் மழைக்காலத்திற்கு பிறகு பணியை ஒப்பந்தாரர் செய்து முடிப்பதாக அரசு தரப்பில் கூறப்பட்டது;
தேவகோட்டையில் ரூ.5.68 கோடி மதிப்பீட்டில் புதிய சாலை அமைக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் பாரதி கண்ணன், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், தேவகோட்டை நகராட்சி பகுதியில் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.முள்ளி குண்டு கலைக்கல்லூரி முதல் வடக்கே தாழையூர் பிரிவு வரையிலும்,தெற்கே ஒத்தக்கடை பாலம் வரையிலும் 6 கி.மீ தொலைவிலான சாலை திருப்பத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் சேர்கிறது.
இந்த சாலை கடந்த 3 ஆண்டுகளாக குண்டும் குழியுமாக உள்ளது கடந்த 6 மாதத்திற்கு முன் சாலை பராமரிப்பு பணி மட்டும் நடந்தது. தற்போது இந்தசாலைமேலும் மோசமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இந்த குழிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. இதனால், அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே, இந்த 6கி.மீ சாலையை சரி செய்து முறையாக புதிய சாலையை அமைக்குமாறு உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை நீதிபதிகள் புஷ்பாசத்யநாராயணா, வேல்முருகன் ஆகியோர் விசாரித்தனர்.
அப்போது தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய திட்ட செயலாக்க துணை பொதுமேலாளர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், இந்தப் பகுதியில் பைபாஸ் சாலை அமைக்க முடிவானது. இதற்கான பணிகளை 30 மாதத்தில் முடிக்க திட்டமிட்டிருந்தோம். முள்ளிக்குண்டு முதல் மாவிடுதி கோட்டை வரையிலான பைபாஸ் சாலை மாநில அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்த பணி ரூ.5.68 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும். தற்போது மழை பெய்து வருவதால் மழைக்காலத்திற்கு பிறகு பணியை செய்து முடிப்பதாக ஒப்பந்தாரர் கூறியுள்ளார் என கூறப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள் சம்பந்தப்பட்ட பகுதியில் சாலை அமைக்கும் பணியை மேற்கொண்டு அது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டுமென கூறி விசாரணையை டிச.21-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.