வட்டாட்சியர் பெயரில் போலி இலவச வீட்டுமனை பட்டா: ஒருவர் கைது
வட்டாட்சியர் பெயரில் போலி இலவச வீட்டுமனை பட்டா கொடுத்து மோசடி செய்ததாக, ஒருவர் கைது செய்யப்பட்டார்.;
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே பூங்குடியைச் சேர்ந்த ஹேமலதா, பிரேமலதா ஆகியோர், 2015-ம் ஆண்டு இலவச வீட்டுமனைப் பட்டா கேட்டு வட்டாட்சியரிடம் மனு செய்தனர். அப்போது, துணை வட்டாட்சியருக்கு சொந்தமான காருடைய ஓட்டுநராக இருந்த பனிப்புலன் வயலைச் சேர்ந்த ராஜவினி (36) என்பவர், ஹேமலதா, பிரேமலதா ஆகியோரிடம் இலவச வீட்டுமனை பட்டா வாங்கி தருவதாகவும், ரூ.60 ஆயிரம் தருமாறும் கேட்டுள்ளார்.
இதை நம்பி இருவரும் ராஜவினியிடம் ரூ.60 ஆயிரம் கொடுத்தனர். இதையடுத்து அவர்களுக்கு அரசு முத்திரையுடன் வட்டாட்சியர் பெயரில் கையெழுத்திட்டு பட்டா கொடுத்துள்ளார். இந்நிலையில் தங்களுக்கு கொடுத்த பட்டா போலி என தெரியவந்ததை அடுத்து, ஹேமலதா, பிரேமலதா ஆகியோர், கோட்டாட்சியர் பிரபாகரனிடம் புகார் கொடுத்தனர். இதையடுத்து கோட்டாட்சியர் புகாரின் பேரில் தேவகோட்டை டவுன் எஸ்ஐ பாலகிருஷ்ணன் வழக்கு பதிந்து ராஜவினியை கைது செய்தார்.