சூறாவளிக் காற்றால் நரிக்குறவர் காலனி வீடுகள் சேதம்: நிவாரணம் வழங்க கோரிக்கை
சூறாவளி காற்றால் இந்தக்காலனியில் உள்ள கூரை வீடுகள் சேதமடைந்ததால் அனைவரும் திறந்த வெளியில் தங்கும் நிலை உருவாகியுள்ளது;
தேவகோட்டை அருகே நரிக்குறவர் காலனியில் உள்ள வீடுகள் நேற்று இரவு வீசிய சூறாவளி காற்றில் முற்றிலும் சேதமடைந்ததால் அந்த மக்கள் சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை சித்தனூரில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட நரிக்குறவர் இன மக்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இவர்களில் ஆண்கள் மலைத்தேன் விற்பனையிலும், பெண்கள் பாசி மணி, ஊசி விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். அனைவரும் தென்னங்கீற்றால் வேயப்பட்ட கூரை வீடுகள் மற்றும் தார்ப்பாயிலான வீடுகளில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று இரவு சூறாவளி காற்றுடன் கூடிய மழை பெய்தது. இந்த சூறாவளி காற்றால் கூரை வீடுகள் தூக்கி வீசப்பட்டு,முற்றிலும் சேதமடைந்தது. குழந்தைகளுடன் இரவு முழுதும் நனைந்தபடியே விழித்திருந்தனர்.மேலும், தண்ணீரில் நனைந்த வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு, ஆதார் கார்டு அனைத்தையும் வெயிலில் உலர வைத்துள்ளனர். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரண உதவியும், இயற்கை சீற்றத்தால் சேதமடையாத வகையில், தொகுப்பு வீடுகள் கட்டிக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, தமிழக அரசுக்கு நரிக்குறவர் இன மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.