தமிழகத்தில் கொலை, கொள்ளை அதிகரித்துள்ளது: கார்த்தி சிதம்பரம் கவலை

தமிழகத்தில் தொடர்ச்சியாக நடைபெறும் கொலை சம்பவங்கள் அதிர்ச்சி அளிப்பதாக, காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

Update: 2021-09-26 00:45 GMT

இது தொடர்பாக, சிவகங்கை மாவட்டம் கண்டனூரில்,  சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கார்த்தி சிதம்பரம் அளித்த பேட்டியில் கூறியதாவது:

இந்தியாவில் இருந்து பிரதமரும், மத்திய அமைச்சர்களும் அடிக்கடி வெளிநாடு சென்றால் தான், நம்மீது உலகப்பார்வை வரும். அந்த வகையில் பிரதமர் மோடி அமெரிக்கா சென்றதை வரவேற்கிறேன். அதே நேரம், வெளிநாட்டு தலைவர்கள் இந்தியாவை பற்றி கூறும் கசப்பான உண்மைகளையும் பிரதமர் கேட்டு நடக்க வேண்டும்.

மத்திய அரசு எடுத்த தவறான பொருளாதார கொள்கையினால், மோடியும், நிர்மலா சீதாராமனும் ஆட்சியில் இருக்கும் வரை பெட்ரோல்,  டீசல் விலை குறையவே குறையாது. உள்துறை அமைச்சரின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள டெல்லி நீதிமன்ற வளாகத்திலேயே, துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருப்பது மத்திய அரசின் நிர்வாக சீர்கேட்டை காட்டுகிறது.

தமிழகத்தில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் கொலை சம்பவங்கள் அதிர்ச்சி அளிக்கின்றன. தமிழக முதல்வர் நேரடியாக தலையிட்டு, காவல்துறையின் மூலம் இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். குற்றவாளிகளை கண்டுபிடித்து குண்டர் சட்டத்தில் அடைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News