காரைக்குடி: தாய் திட்டியதால் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை
மாணவர் கல்லூரிக்கு வராதது குறித்து கல்லூரி நிர்வாகம் தொலைபேசி வாயிலாக, அவரது தாய்க்கு தகவல் தெரிவித்துள்ளனர்;
காரைக்குடியில் தாய் திட்டியதால் மனமுடைந்த கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, தந்தை பெரியார் நகரில் வசித்து வருபவர் சித்ரவள்ளி.இவரது கணவர் ரவிசந்திரன் வெளிநாட்டில் பணிபுரிந்து வரும் நிலையில், தனது மகன் அஸ்வினுடன் காரைக்குடியில் வசித்து வருகிறார்.அஸ்வின் புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்நிலையில், அஸ்வின் கல்லூரிக்குச் செல்லாமல், தனது நண்பர்களுடன் பொழுது போக்கி விட்டு, வீட்டுக்கு வந்தாராம். மாணவன் கல்லூரிக்கு வராதது குறித்து கல்லூரி நிர்வாகம் தொலைபேசி வாயிலாக, தாய் சித்ர வள்ளிக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, கல்லூரிக்கு செல்லாதது குறித்து அஸ்வினை கண்டித்து திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அஸ்வின் தனது அறைக்கு சென்று அங்குள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவலறிந்த காவல்துறையினர், அஸ்வின் உடலை மீட்டு, உடற்கூறு ஆய்விற்காக காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.