பணியிட மாற்றத்தை கண்டித்து போக்குவரத்துக்கழக சிஐடியு சங்கத்தினர் போராட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி பேருந்து பணிமனை முன்பு அனைவரும் படுத்திருந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்;
அரசு போக்குவரத்து தொழிலாளர்களை பணியிடம் மாற்றம் செய்ததைக் கண்டித்து சிஐடியு சங்கத்தினர் 3வது நாளாக காத்திருப்பு போராட்டம் தொடர்கிறது.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில், அரசு போக்குவரத்து கழக கும்பகோணம் கோட்டத்தின், மண்டல அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு பணியாற்றிய போக்குவரத்து ஊழியர்கள் ரவிச்சந்திரன் மற்றும் தியாகராஜன் ஆகியோர் மண்டல நிர்வாகத்திற்கு எதிராக நடந்து கொண்டதாக கூறி, கடந்த சில நாட்களுக்கு முன்பு பணி இடமாற்றம் செய்ததாக கூறப்படுகிறது. பழிவாங்கும் நோக்கில் தொழிலாளர்கள் இருவரையும் போக்குவரத்து நிர்வாகம் பணியிட மாற்றம் செய்ததாகவும், உடனடியாக அதனை ரத்து செய்யக்கோரியும்,சிஐடியு சங்கத்தினர் மூன்றாவது நாளாக, மண்டல அலுவலகத்தின் வாயிலில் அமர்ந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இதுபோன்று பழிவாங்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும் பணி மாறுதல் செய்த இருவரையும் மீண்டும் பழைய இடத்தில் பணியில் அமர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேருந்து பணிமனை முன்பு அனைவரும் படுத்திருந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்