பெட்ரோல் பங்க் அருகே பற்றி எரிந்த கார் - தேவக்கோட்டையில் பரபரப்பு
தேவக்கோட்டை பெட்ரோல் பங்கில் டீசல் போட வந்த கார் தீப்பிடித்து எரிந்து முற்றிலும் சேதமடைந்தது. இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.;
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே, உஞ்சனை புதூரை சேர்ந்தவர் பாண்டியன். இவர், தேவகோட்டை லட்சுமி திரையரங்கம் எதிரே உள்ள பாரத் பெட்ரோல் பங்க்கில், காருக்கு டீசல் போட சென்றார். அப்போது, டீசலுக்கு பதிலாக தவறுதலாக பெட்ரோல் நிரப்பிய தாக கூறப்படுகிறது.
இதனை கவனித்த காரின் உரிமையாளர் பாண்டியன் ஊழியர்களிடம் கூறவே,பெட்ரோல் போடுவதை நிறுத்திவிட்டு, சிறிது தூரம் தள்ளி காரை நிறுத்தி, காரில் இருந்த பெட்ரோலை டியூப் மூலம் வெளியே எடுத்துள்ளனர். அப்போது திடீரென கார் தீப்பற்றி மளமளவென எரிய தொடங்கியது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பெட்ரோல் பங்க் ஊழியர்கள், உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலையடுத்து சம்பவம் இடத்துக்கு வந்த தீயணைப்பு துறையினர், விரைந்து தீயை அணைத்தனர். எனினும், கார் முற்றிலும் எரிந்து சேதமான நிலையில், தீயணைப்பு துறையினர் விரைந்து செயல்பட்டதால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. சம்பவம் இடம் வந்த போலீசார், தீ விபத்து குறித்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.