காரைக்குடியில் பாஜக கொடிக்கம்பத்தை அகற்றிய போலீசார் - பரபரப்பு
காரைக்குடியில், பாஜக மற்றும் தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சி கொடி கம்பங்களை காவல்துறையினர் அகற்றியதால், பரபரப்பு நிலவியது.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மீனாட்சிபுரம் பொதுப்பணித்துறை அலுவலகம் எதிரே, தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் கொடிக்கம்பம், 2014 முதல் இருந்தது. இந்நிலையில் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, நன்னடத்தை விதிமுறைகளால் அக்கொடி கம்பத்தை அதிகாரிகள் அகற்றினர்.
சமீபத்தில், அதே பகுதியில் பாஜகவினர் சில நாட்களுக்கு முன், அனுமதியின்றி கொடியேற்றியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, ஏற்கனவே கொடிக்கம்பம் இருந்த இடத்தில், தமிழக மக்கள் ஜனநாயகக்கட்சியினர், கொடிக்கம்பம் நட்டனர். இன்று, அதில் கொடியேற்ற இருந்த நிலையில், இதற்கு காவல்துறை அனுமதி மறுத்தனர்.
இதனிடையே, அங்கு இன்று பாஜகவினரும் திரண்டனர். இதனிடையே, அனுமதியின்றி நடப்பட்ட பாஜக மற்றும் தமிழக மக்கள் ஜனநாயகக்கட்சி ஆகிய 2 கொடிக் கம்பங்களையும் காவல்துறை அகற்றினர். இதனால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது. இரு கொடிக்கம்பங்களும், அடுத்தடுத்து இருப்பதால், வருங்காலங்களில் பிரச்சினை ஏற்படக்கூடாது என்பதற்காக அகற்றியதாக, என காவல்துறையினர் தெரிவித்தனர்.