காரைக்குடியில் அனைத்து வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
வங்கிகள் தனியார் மயம் ஆவதை கண்டித்து, காரைக்குடியில் அனைத்து வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;
வங்கிகள் தனியார் மயமாக்குவதை கண்டித்தும், பொதுச் சொத்துக்களை தனியாருக்கு தாரை வார்க்கும் மத்திய அரசை கண்டித்தும் வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில் வேலை நிறுத்த போராட்டம் நேற்று தொடங்கியது. இதனால் வங்கி சேவைகள் முடக்கப்பட்டு, பல ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இரண்டாம் நாளாக இன்றும் போராட்டம் தொடர்ந்தது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில், அனைத்து வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஐ.ஓ.பி., அதிகாரிகள் சங்க உதவி பொது செயலாளர் மனோஜ் தலைமை வகித்தார். பாரத ஸ்டேட் வங்கி சங்க மண்டல செயலாளர் ராஜ்குமார் முன்னிலை வகித்தார். சிவகங்கை வங்கி ஊழியர் சங்க பொது செயலாளர் பிரேம் ஆனந்த், காரைக்குடி எம்.எல்.ஏ., மாங்குடி, இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். வங்கி ஊழியர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று கோஷமிட்டனர்.