தி.மு.க. கார்ப்பரேட் கம்பெனி பணம் போட்டால் சேர் கிடைக்கும்: முதல்வர் பழனிச்சாமி பேச்சு
திமுக என்பது கட்சியல்ல கார்ப்பரேட் கம்பெனி, இதில் பணம் போடுபவர்களுக்கு சேர் கிடைக்கு என காரைக்குடி பிரசார கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பா.ஜ., வேட்பாளர் எச்.ராஜாவை ஆதரித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது.
தி.மு.க., கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி. அ.தி.மு.க.,வே மக்களுக்கு சேவை செய்யும் கூட்டணி. தி.மு.க., ஆட்சியில் எந்த சாதனையும் செய்தது கிடையாது.
அதனால்தான் சாதனையை சொல்வது இல்லை. மத்திய அரசு தமிழகத்திற்கு எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றியுள்ளது. ரூ.1 லட்சம் கோடி கொடுத்துள்ளது.
மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தால்தான் திட்டங்களை கொண்டு வர முடியும். தமிழக அரசின் திட்டங்களுக்கு மத்திய அரசின் நிதி தேவை. கோதாவரி - காவிரி இணைப்பு திட்டத்திற்கு மத்திய அரசின் அனுமதி தேவை, நிதியும் தேவை.
தி.மு.க., அ.தி.மு.வை பார்த்து பா.ஜ.,வுக்கு அடிமை என்கிறது. ஆனால், தி.மு.க.தான் காங்கிரசுக்கு அடிமை. அதிகாரம் எங்கு இருக்கிறதோ அங்கு தி.மு.க., மாறிவிடும்.
தி.மு.க., நாட்டு மக்களை பார்க்கவில்லை. குடும்பத்தை மட்டும்தான் பார்க்கிறது. இந்த தேர்தல் குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தல்.
தி.மு.க., கட்சி அல்ல கம்பெனி. கம்பெனியில் பணம் போடுபவருக்கு சேர் கிடைக்கும். தற்போது செந்தில் பாலாஜி பணம் போட்டு சேர் வாங்கியுள்ளார். தி.மு.க.,வில் உள்ள பெரும்பாலோனோர் அ.தி.மு.க,வினர்தான்.
ராஜ கண்ணப்பன் பச்சோந்தி போன்று. கலர் மாறுவதை போல கட்சி மாறி களம் காண்பவர். அவரை கணக்கில் எடுப்பது கிடையாது. 2 ஆண்டுக்கு முன்பு ஸ்டாலின் எங்களுடைய குடும்பத்தில் யாரும் அரசியலுக்கு வரமாட்டார்கள் என்றார்.
தற்போது உதயநிதியை வேட்பாளராக அறிவித்துள்ளார். தி.மு.க.,வில் 20 வேட்பாளர்கள் வாரிசு வேட்பாளர்கள். மக்களுக்கு சேவை செய்யும்அ.தி.மு.க., மக்களுக்கானக் கட்சி இவ்வாறு அவர் பேசினார்..