செஸ் விளையாட்டில் உலக போட்டிக்கு தகுதி: பல சாதனைகளை நிகழ்த்தி வரும் பள்ளி மாணவன் பிரனேஷ்
ஓடி ஆடி விளையாடுவது தொந்தரவாக இருப்பதாக வீட்டின் உரிமையாளர் கூறிய ஒற்றை வார்த்தை : செஸ் விளையாட்டில் உலக சாதனையாளராக மாறிய பிரனேஷ்;
செஸ் விளையாட்டில் பல சாதனைகளை நிகழ்த்தி வரும் காரைக்குடி பள்ளி மாணவன் பிரனேஷ்..!
ஒவ்வொருவரின் சாதனைகளுக்கும் பின்புலத்தில் அவமானங்கள், தடைகள் போன்ற காரணங்கள் இருக்கும் என்பதே வரலாறு.
பள்ளி மாணவன் பிரனேஷ் வாடகைக்கு மாடி வீட்டில் வசித்து வரும்போது ஓடி ஆடி விளையாடுவது தொந்தரவாக இருப்பதாக கீழ் வீட்டிலிருக்கும் உரிமையாளர் கூறிய ஒற்றை வார்த்தை மாணவர் பிரனேஷை ஆடாமல் அசையாமல் விளையாடக்கூடிய செஸ் விளையாட்டை தேர்ந்தெடுக்கச்செய்யதுடன், அந்த விளையாட்டில் சர்வதேச அளவில் சாதனையாளராக மாற்றியிருக்கிறது என்பதுதான் இந்தச்சிறப்பு செய்தியின் சாரம்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியை சேர்ந்த 15 வயது பள்ளி மாணவர் பிரனேஷ்.காரைக்குடி வித்யாகிரி பள்ளியில் படித்து வருகிறார். தந்தை முனிரத்தினம் ஜவுளிக்கடை ஒன்றில் கணக்கராகவும், அம்மா மஞ்சுளா அங்கன்வாடி பணியாளராகவும் இருந்து வருகின்றனர்.
தற்போது வாடகை வீட்டில் மாடியில் வசித்து வரும் இவர்களது குழந்தைகள் சிறு வயதில் வீட்டில் அங்குமிங்கும் ஓடியாடி விளையாடியபோது, வீட்டின் உரிமையாளர், கீழே இருக்க முடியவில்லை, சப்தம் போடாமல், அமைதியாக ஓடாமல் விளையாடுங்கள் என்று சப்தம் போட்டாராம்.
இதனால், ஓடி ஆடி விளையாடுவதை நிறுத்திய பிரனேஷ், தாய் மஞ்சுளாவிடம் அமர்ந்து விளையாடும் விளையாட்டை சொல்லித் தரும்படி கேட்டார். அவரும், செஸ், கேரம் போர்டு போன்றவற்றை வாங்கி கொடுத்தனர். ஆரம்ப கால குருவாக இருந்து அம்மா கற்று கொடுத்தார். ஐந்து வயதிலேயே அபார ஞானம் உள்ளவராக இருந்ததால் கற்றுக்கொடுத்த அம்மாவையே செஸ் போட்டியில் வென்று காட்டினார்.
தனது குழந்தையின் திறமை வெளி உலகுக்கு தெரிய வேண்டும் என எண்ணிய அவரது தந்தை காரைக்குடியில் உள்ள செஸ் அகாடமியில் சேர்த்து விட்டார். அந்த மைய பயிற்சியாளர் பிரனேஷை மாவட்ட, மாநில போட்டிகளில் வெற்றி பெறும் அளவுக்கு உருவாக்கினார்.10 வயதுக்குள் பல்வேறு பரிமாணங்களை கடந்து சாதனையை படைத்தார் பிரனேஷ்.
இவரது திறமையை பார்த்த சென்னையை சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் ரமேஷ் ஆன்லைன் வழியாகவும், நேரடியாகவும் இலவச பயிற்சி அளித்தார்.மாநில அளவில் என்ற மாணவனின் சாதனை, தேசிய, உலக அளவில் உயர்ந்தது.
2020-ஆம் ஆண்டு பிப்ரவரியில் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடந்த ஏரோபிளாட் கிராண்ட் மாஸ்டர் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. அங்கு ரஷ்யாவின் கிராண்ட் மாஸ்டர் சவ்ஜிங்கோ போரிஸ், சூப்பர் கிராண்ட் மாஸ்டர் கார்த்திகேயன் முரளி, ஜெர்மனியின் சூப்பர் கிராண்ட் மாஸ்டர் சிவானோராஸ்மஸ் என உலகின் முதல் தரமான 9 செஸ் வீரர்களுடன் போட்டியிட்டு வென்று காட்டி சர்வதேச மாஸ்டரில் 3-ஆவது நாமை வென்று காட்டினார்.
பள்ளிக்கல்வித்துறை சார்பில் 2017-18 மற்றும் 2018-19-ஆம் ஆண்டு நடந்த தேசிய அளவிலான போட்டியில் 2 முறை தங்கம் வென்று தமிழக அரசின் ரூ.2 லட்சம் பரிசை வென்றார். இதுவரை 58 -க்கும் மேற்பட்ட தங்கம், வெள்ளி பதக்கங்களை வசப்படுத்தி வைத்துள்ளார். எதிர்காலத்தில் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்று தமிழ்நாட்டுக்கும் , தமிழர்களுக்கும் பெருமை சேர்த்து இந்தியாவுக்கு பெருமைப்படும் வகையில் பாடுபடுவேன் என்கிறார் இந்த வருங்கால கிராண்ட் மாஸ்டர் பிரனேஷ்.