மலைப்பாதை அமைத்து தர வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

மலைப்பாதை அமைத்து தர வலியுறுத்தி தமிழ்நாடு பழங்குடியின மக்கள் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

Update: 2022-01-20 07:00 GMT

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பழங்குடி மக்கள் சங்கத்தினர் 

சேலம் மாவட்டம் அயோத்தியப்பட்டினம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆலடிப்பட்டி ஊராட்சியில் சுமார் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். குறிப்பாக ஆலடிபட்டி பகுதி முழுவதும் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர்.  இப்பகுதியில் இருப்பவர்கள் பள்ளி கல்லூரிகளுக்கு செல்ல வேண்டும் என்றாலும், விவசாய பொருட்களை சேலம் நகர பகுதிகளுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றால் அறுநூத்துமலை, குறிச்சி, பேளூர் வழியாக சுமார் 65 கிலோ மீட்டர் வரை சுற்றிவர வேண்டியதாக உள்ளது.

ஆனால் ஆலடிபட்டியில் இருந்து புங்கன் சாலை வழியாக தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி கோம்பூர் ஊராட்சிக்கு நான்கு கிலோமீட்டர் தூரம் தான் உள்ளது. இந்த நான்கு கிலோமீட்டர் வரை வனப்பகுதியில் சாலை அமைத்து கொடுத்தால் பழங்குடியின மக்கள் எளிதாக இருக்கும் என பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இதுவரை அதற்கான நடவடிக்கைகளில் மாவட்ட நிர்வாகம் கண்டு கொள்ளாமல் இருப்பதாக  கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்றைய தினம் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு  தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கம் சார்பில் 100க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த சாலை 1 கிலோ மீட்டர் சேலம் மாவட்டத்திலும், 3 கிலோமீட்டர் தர்மபுரி மாவட்டத்தில் வருகிறது.  தமிழக அரசும், இரண்டு மாவட்ட நிர்வாகமும் இணைந்து புங்கன் சாலை முதல் கோம்பூர் வரை மலைப்பாதை அமைத்து பழங்குடி மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த உதவ வேண்டும் என வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Tags:    

Similar News