குடிநீர் வினியோகம் கோரி ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்
சேலம் அருகே, குடிநீர் வினியோகம் கோரி, ஊராட்சி அலுவலகத்தை காலி குடங்களுடன் பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.;
குடிநீர் வினியோகிக்கக்கோரி, கொண்டப்பநாய்க்கன்பட்டி ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்.
சேலம் ஏற்காடு அடிவாரம் கொண்டப்பநாய்க்கன்பட்டி ஊராட்சி பகுதியில், 5000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் சத்ய நகர், தாமரை நகர், டெலிபோன் காலனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், கடந்த 5 நாட்களுக்கு மேலாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.
இது குறித்து அதிகாரிகளிடம் பலமுறை எடுத்துரைத்தும் எந்த நடவடிக்கையும் இல்லாததால் ஆவேசமடைந்த பொதுமக்கள், இன்று ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு, காலி குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
இதனையடுத்து, காவல்துறையினர்ம் அதிகாரிகள் விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சம்பந்தப்பட்ட பகுதியில் உடனடியாக தண்ணீர் வசதி ஏற்படுத்தி தர தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என பொதுமக்களுக்கு உறுதி அளித்தனர். இதனையடுத்து, பொதுமக்கள் தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர் குடிநீர் கேட்டு பொதுமக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.