அடியாட்களை அழைத்து வந்து உறவினர்களை தாக்கிய காவலர்
அடியாட்களை அழைத்து வந்து உறவினர்களை தாக்கிய காவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட இளைஞர்கள் கோரிக்கை.;
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள எம்.பெருமாபாளையம் பகுதியில் நேற்று நள்ளிரவில் ஆட்டோவில் அடியாட்களை அழைத்து வந்து உறவினர்கள் மீது தாக்குதல் நடத்தி கொலை மிரட்டல் விடுத்த ஆயுதப்படை காவலர் மீது உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட இளைஞர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
எம். பெருமாபாளையம் பகுதியைச் சேர்ந்தவர்கள் அருண்குமார் (25), அசோக்குமார் (29). இருவரும் சகோதரர்கள். இவர்களின் மற்றொரு உறவினர் மாயவன் (27) சேலம் ஆயுதப்படை காவலராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு பெருமாபாளையம் பகுதியில், ஆயுதப் படைக் காவலர் மாயவன், மதுபோதையில் ஊரில் உள்ள இளைஞர்களிடம் இருசக்கர வாகனம் அபராத தொகை பறிப்பில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதனை தட்டிக்கேட்ட அருண்குமார் மற்றும் அசோக்குமாரை சரமாரியாக தாக்கி விட்டு தப்பிய மாயவன், நள்ளிரவு 12 மணியளவில் சேலம் கிச்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த 15 அடியாட்களை அழைத்து வந்து , அருண் குமார் மற்றும் அசோக்குமாரை வீடு புகுந்து தாக்கியுள்ளார்.தடுக்க வந்தவர்கள் அனைவரையும் மாயவன் தலைமையிலான அடியாட்கள் தாக்குதல் நடத்தி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதில் காயமடைந்த அருண்குமார் அசோக்குமார் வாழப்பாடி காவல் நிலையத்தில் நேற்றிரவு ஆயுதப்படை காவலர் மாயவன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து இருவரும் சேலம் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்கு பிறகு தற்போது சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.