தொடர் மழையால் ஏற்காடு மலைப்பாதையில் மண் சரிவு- போக்குவரத்து பாதிப்பு
தொடர் மழை காரணமாக, சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப்பாதையில் மண் சரிவு ஏற்பட்டது.
சேலம் மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக சுற்றுலா தலமான ஏற்காட்டில் , நாள்தோறும் இரவு நேரங்களில் மழை பெய்த வண்ணம் உள்ளது. ஏற்காடு மலைப்பாதையில் இரண்டாவது கொண்டை ஊசி வளைவு அருகே மண் சரிவு ஏற்பட்டது.
சாலை மற்றும் தடுப்புச்சுவர் கற்கள் சரிந்து கீழ் சாலையில் விழுந்ததால், வாகன போக்குவரத்துக்கு முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டது. மண் சரிவு குறித்து தகவல் அறிந்த நெடுஞ்சாலைத்துறையினர், உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். நேற்று மாலையும் தொடர்ந்து மிதமான மழை பெய்த போதிலும் இரவு முழுவதும் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
மண்சரிவு ஏற்பட்ட பகுதியில், மேற்கொண்டு சரிவு ஏற்படலாம் என்பதற்காக அடிவாரத்தில் உள்ள காவல்துறை சோதனைச்சாவடியிலேயே வாகனங்கள் அனைத்தும் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டன. இதனால் சேலத்தில் பணிகளை முடித்துவிட்டு வழக்கமாக ஏற்காடு செல்லும் குடியிருப்புவாசிகள், மற்றும் சேலத்தில் இருந்து ஏற்காடு சென்று பணிபுரிந்து வீடு திரும்பும் பணியாளர்கள் என பலரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.