குடிபோதையில் முககவசம் அணியாத ஆம்புலன்ஸ் ஓட்டுனரின் மூக்கை உடைத்த காவலர்.
சேலம் அரசு மருத்துவமனை.;
சேலத்தில் முக கவசம் அணியாத ஆம்புலன்ஸ் ஓட்டுனரின் மூக்கை உடைத்த காவலர். பாதிக்கப்பட்ட ஆம்புலன்ஸ் டிரைவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்..
சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் ஆம்புலன்ஸ் டிரைவராக பணியாற்றி வருபவர் ஹரிஷ். இவர் கொரானாவால் பாதிக்கப்பட்ட ஒருவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளார். அப்போது அவர் முககவசம் அணியாமல் இருந்ததைக் கவனித்த அரசு மருத்துவமனை வளாகத்தில் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த கொண்டலாம்பட்டி காவல் நிலையத்தை சேர்ந்த தலைமை காவலர் சந்திரன் என்பவர் இது குறித்து ஆம்புலன்ஸ் ஓட்டுனரிடம் கேட்டுள்ளார். மேலும் முக கவசம் அணியுமாறு அறிவுரை வழங்கியுள்ளார்.
அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் தலைமைக் காவலரை போதையில் இருந்த ஆம்புலன்ஸ் ஓட்டுனர் தரக் குறைவாக பேசியதாகவும் கூறப்படுகிறது. இதனால் பொறுமை இழந்த தலைமை காவலர் அருகிலுள்ள குச்சியை எடுத்து ஹரிஷை தாக்கியதாகவும் இதனால் ஆம்புலன்ஸ் ஓட்டுனரின் மூக்கு பகுதி காயமடைந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து ஆம்புலன்ஸ் டிரைவரை விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
இந்த நிலையில் ரத்தம் சொட்ட சொட்ட ஆம்புலன்ஸ் டிரைவர் ஹரிஷ் முக கவசம் அணியாததால் காவலர் தன்னை கடுமையாக தாக்கியதாக கூறி சமூக வலைதளங்களில் தனது வீடியோவை பதிவிட்டுள்ளார். ரத்தம் சொட்ட சொட்ட ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பேசும் இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.
சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட செவ்வாப்பேட்டை காவல்துறையினர் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் குடிபோதையில் இருந்ததால் அவர் அப்படி நடந்து கொண்டதாகவும் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் குடிபோதையில் இருந்ததை உறுதி செய்ததாகவும் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து ஆம்புலன்ஸ் டிரைவர் புகார் ஏதும் தெரிவிக்காமல் தற்போது காவல்துறையினர் விசாரணை அளவில் மட்டுமே இந்த சம்பவம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
முக கவசம் அணியாததால் மூக்கை உடைத்த காவலரின் செயல் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.