சேலம்: வழித்தட பிரச்சினையில் சடலத்தை சாலையில் வைத்து உறவினர்கள் போராட்டம்

சேலம் அருகே, வழித்தட பிரச்சினையில் நான்கு மணி நேரமாக சடலத்தை சாலையில் வைத்து போராடிய உறவினர்களால் பரபரப்பு நிலவியது.

Update: 2021-07-01 10:13 GMT

மலங்காடு கிராமத்தில், வழித்தட பிரச்சினையில், சடலத்தை சாலையில் வைத்து போராடிய உறவினர்கள்.

சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள மலங்காடு கிராமத்தை சேர்ந்தவர் அய்யனாரப்பன் (70), இவருக்கும் இவரது சகோதர்களான ஐயம்பெருமாள், நாச்சிகவுண்டர் இடையே ஐந்து ஆண்டுகளாக 12 அடி உள்ள வழித்தட பிரச்சினை இருந்து வந்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு நீதிமன்றத்தில், வழித்தடத்தை சகோதரர்கள் மூவரும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தீர்ப்பு வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அய்யனாரப்பனுக்கும், அவரது சகோதரர்களுக்கும் இடையே தொடர்ந்து பிரச்சினை நீடித்தது.

இந்நிலையில் இன்று அய்யனாரப்பன், உடல்நலக்குறைவால் காலமானார். அவரது உடலை நெய்க்காரப்பட்டியில் உள்ள மயானத்திற்கு எடுத்துச் செல்லும்போது, அந்த வழித்தடத்தை பயன்படுத்தக்கூடாது என்று கூறி, மற்ற சகோதரர்கள் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இருதரப்பினர் இடையே வாக்குவாதம் முற்றி மோதல் ஏற்பட்டது.

இதையடுத்து வழித்தட பிரச்சினை முடியும் வரை, சடலத்தை எடுக்க மாட்டோம் என்று கூறி, பிரச்சினைக்குரிய வழித் இடத்திலேயே,  அய்யனாரப்பனின் உடலை வைத்துவிட்டு உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. 

தகவலறிந்து அங்கு வந்த கொண்டலாம்பட்டி காவல்துறையினர், இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். சுமார் 4 மணி நேரமாக நடைபெற்ற போராட்டத்திற்கு பிறகு, உடலை அடக்கம் செய்ய எடுத்துச் செல்லப்பட்டது.

Tags:    

Similar News